ஷா ஆலம், மார்ச் 20 – தாவாஸ் திட்டத்தின் கீழ், 2008-ஆம் ஆண்டில் பிறந்த 825 உறுப்பினர்களுக்குத் தலா 1,500 வெள்ளி வீதம், மொத்தம் 1.23 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான நிதியுதவி கடந்த சில தினங்களுக்கு முன் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிலாங்கூர் புதல்வர் மரபுரிமை அறவாரியத்தின் யாவாஸ் தலைமைச் செயல் அதிகாரி கான் பெய் நெய் விடுத்துள்ள அறிக்கையில்,
முதற்கட்டமாக 2008-ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பிறந்தவர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக யாவாஸ் தலைமைச் செயல் அதிகாரி கான் பெய் நெய் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.
கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் மின்னணு நிதிப் பரிமாற்றம் (EFT) மற்றும் மின்-பணப்பை (e-wallet) வாயிலாக இந்த விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரை பிறந்த மொத்தம் 1,651 பயனாளர்களுக்குச் சுமார் 2.4 மில்லியன் வெள்ளி நிதி, மார்ச் 30-ஆம் தேதிக்குள் படிபடியாக வழங்கி முடிக்கப்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
பயனாளர்களின் பிறந்த மாதத்தின் அடிப்படையில் இந்த நிதியுதவி நான்கு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய உறுப்பினர்கள் 18 வயதை எட்டும்போது மட்டுமே இந்த 1,500 வெள்ளியைப் பெற முடியும் என்பதால், ஏப்ரல் மாதம் மற்றும் அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு இரண்டாம் கட்டத்தில் நிதி வழங்கப்படும்.
2008-இல் பிறந்த மொத்தம் 21,295 உறுப்பினர்கள் இந்த ஆண்டு இந்த நிதியுதவியைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர். தகுதியுடையவர்கள் ஓராண்டு காலத்திற்குள் இந்த நிதியைக் கோருவதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கோரிக்கை விடுக்கப்படாவிட்டால், அந்த நிதி மாநில அரசின் அடுத்தகட்ட முடிவிற்கு உட்படுத்தப்படும் என்றும் கான் பெய் நெய் விளக்கமளித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தின் எதிர்காலத் தலைமுறையினரின் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இந்த உதவியை முறையாகப் பெற்றிட, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் யாவாஸ் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி வாயிலாகத் தகவல்களைச் சரிபார்த்து விண்ணப்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக இது குறித்துக் கருத்துரைத்த சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, 2008-இல் தொடங்கப்பட்ட தாவாஸ் திட்டம் தற்போது அதன் இலக்கை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார். இது மாநில அரசு இளையோர் நலனில் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.








