ஷா ஆலம், ஜூலை 12: இங்குள்ள கம்போங் ஜாவாவில் (Kampung Jawa) செயல்பட்டு வந்த ஒரு காகித ஆலையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 50 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நல்வினைப்பயனாக உயிர் தப்பினர்.
அதிகாலை மணி 1 அளவில் இந்த விபத்து நடந்தபோது, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் அந்த ஆலையின் கன்டெய்னர் தங்கும் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு - மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்தார்.
அதிகாலை மணி 1.46-க்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து ஷா ஆலம் தீயணைப்பு மீட்பு நிலைய வாகனங்கள் 11 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
முதற்கட்ட விசாரணையின்படி, காகிதக் குவியலின் அடிப்பகுதியில் இருந்தே தீப்பற்றிக் கொண்டது தெரியவந்தது. தீயணைப்பு நீர்நிலையின் தூரம் சுமார் 1,000 அடி என மிகவும் தொலைவில் இருந்தது.
மேலும், அந்த ஆலையில் தீ தடுப்பு அமைப்புகள் எதுவும் இல்லை என்று அஷ்ருல் ரிசால் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
கன்டெய்னர்களால் செய்யப்பட்ட தொழிலாளர் தங்கும் விடுதி ஆலையின் பின்புறம் அமைந்துள்ளதாகவும், அதற்கு முறையான நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் இல்லை என்றும், தீயணைப்பு அமைப்புகள் எதுவும் அங்கு இல்லை என்றும் அஷ்ருல் ரிசால் குறிப்பிட்டார்.
மேலும், தீ விபத்து ஏற்பட்ட இடம் பெட்ரோனாஸுக்கு சொந்தமான எரிவாயு குழாய் பாதைக்கு அருகில் இருந்ததால், தீயை விரைவாகக் கட்டுப்படுத்தாவிட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம் இருந்தது என்றும் அவர் கூறினார்.
அருகிலுள்ள ஆலைகளுக்கு தீ பரவாமல் இருக்க அதிகாலை 2.50 மணிக்கு அத்தீ வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டது.









