ஷா ஆலம், ஏப்ரல் 7: டாமான்சாரா-பூச்சோங் நெடுஞ்சாலையில் (LDP) செர்டாங் சந்திப்பைச் சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 80 மில்லியன் ரிங்கிட் செலவில் மேம்பால யூ-திருப்பப் பாதை அமைக்கும் திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது.
இத்திட்டத்திற்கான ஆலோசகர்கள் மேம்பால யூ-திருப்பப் பாதையின் வடிவமைப்பை சுபாங் ஜெயா மாநகராட்சியிடம் (MBSJ) சமர்ப்பித்துள்ளதாக அதன் மேயர் டத்தோ அமிருல் அஜிசான் அப்துல் ரஹீம் தெரிவித்தார்."மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (LLM) அங்கீகரித்த வடிவமைப்பை நாங்கள் ஆய்வு செய்து, அது கட்டப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டோம். ""இருப்பினும், எங்கள் பொறியியல் துறை இன்னும் திட்டத்திற்கான வரவுசெலவுத் திட்டத்தை இறுதி செய்து வருகிறது," என்று அவர் தி ஸ்டார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இத்திட்டம் முடிவடைய மூன்று ஆண்டுகள் ஆகும் என்றும், கட்டுமானச் செலவை மேம்பாட்டாளர்களும் MBSJ-யும் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் அவர் விளக்கினார்."இந்தத் திட்டத்திற்கு பங்களிக்கப் போகும் மேம்பாட்டாளர்களை நாங்கள் இறுதி செய்து வருகிறோம்," என்று கூறிய அவர், கட்டுமானப் பணிகள் தொடங்கும் தேதியைக் குறிப்பிடவில்லை.
இதற்கிடையில், ஸ்ரீ செர்டாங் சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் சலிமி சே அட்ஜ்மி @ அஸ்மி, அப்பகுதியில் நெரிசலைக் குறைக்க மேலும் இரண்டு திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்."அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளை இணைக்க ஒரே ஒரு பிரதான சாலை மட்டுமே இருப்பதால் செர்டாங் சந்திப்பு மற்றும் ஜாலான் புத்ரா பெர்மாயில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
""சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, கோத்தா பெர்டானாவிலிருந்து பெர்சியாரான் டெசாமினியம் 1-க்கு ஒரு இணைப்புச் சாலையை மேம்பாட்டாளர்கள் கட்டியிருக்க வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை.
""இந்த மேம்பால யூ-திருப்பப் பாதையின் கட்டுமானம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்றார்.மேலும், ஜாலான் புத்ரா பெர்மாய் நெடுகிலும் உள்ள போக்குவரத்து விளக்குகளைத் தவிர்ப்பதற்காக இரண்டு மேம் பாலங்களைக் கட்டும் மற்றொரு திட்டமும் திட்டமிடப் பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
"ஆலோசகர்கள் இது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்த ஆண்டு இறுதியில் கட்டுமானம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்றார். புதியதாக முன்மொழியப்பட்ட இந்த மேம்பால யூ-திருப்பப் பாதை, புத்ராஜெயாவிலிருந்து பூச்சோங் செல்லும் வாகன ஓட்டிகள் செர்டாங் சந்திப்பைத் தவிர்த்து நேரடியாக ஜாலான் புத்ரா பெர்மாய்க்குள் திரும்ப அனுமதிக்கும்.செர்டாங் சந்திப்பு 1999-இல் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.
இது LDP-யிலிருந்து ஜாலான் புத்ரா பெர்மாய் வழியாக ஸ்ரீ கெம்பாங்கானுக்குச் செல்லும் பயணிகளால் பயன்படுத்தப்படுகிறது. சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட துரிதமான வளர்ச்சியின் காரணமாக, இந்தச் சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.








