எல்.டி.பி நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வந்த கார் 2 கார்கள் மீது மோதி விபத்து: ஓட்டுநருக்குக் காயம்

2 ஜூன் 2026, 7:54 AM
எல்.டி.பி நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வந்த கார் 2 கார்கள் மீது மோதி விபத்து: ஓட்டுநருக்குக் காயம்

ஷா ஆலம், ஜூன் 2 - டாமன்சாரா-பூச்சோங் நெடுஞ்சாலையில் (எல்.டி.பி) எதிர் திசையில் காரை ஓட்டிச் சென்ற ஆடவர் ஒருவர், நேற்றைய தினம் செர்டாங் அருகே 3 வாகனங்கள் மோதிய விபத்தில் சிக்கிக் காயமடைந்தார்.

இது குறித்த புகார் பிற்பகல் 1.07 மணியளவில் பெறப் பட்டதாகச் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் முகமட் ஃபரிட் அகமட் தெரிவித்தார்.

"எல்.டி.பி நெடுஞ்சாலையில் ஆடவர் ஒருவர் ஹோண்டா சிட்டி (Honda City) ரகக் காரை எதிர் திசையில் ஓட்டிச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சன்வேயில் இருந்து பூச்சோங் நோக்கி வந்து கொண்டிருந்த பெரோடுவா அக்ஸியா (Perodua Axia) மற்றும் ஹோண்டா சி.ஆர்.வி (Honda CRV) ஆகிய இரு கார்கள் மீது அந்த ஆடவர் மோதியுள்ளார்" என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

எதிர் திசையில் வாகனத்தை ஓட்டிய ஹோண்டா சிட்டி கார் ஓட்டுநருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையே, போலீஸ் விசாரணையின் ஒரு பகுதியாக, பகுப்பாய்வுக்காக அந்த ஆடவரின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ரசாயனத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

"பெரோடுவா அக்ஸியா மற்றும் ஹோண்டா சி.ஆர்.வி கார்களின் ஓட்டுநர்களுக்கு எவ்விதப் பலத்த காயமும் ஏற்படவில்லை. அதே வேளையில், மருத்துவச் சிகிச்சைகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் ஹோண்டா சிட்டி ஓட்டுநரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்" என்று அவர் கூறினார்.

1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 42(1)-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மேல் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் முகமட் ஃபரிட் தெரிவித்தார்.

"இந்த விபத்து குறித்துத் தகவல் தெரிந்த பொதுமக்கள், போலீஸ் விசாரணைகளுக்கு உதவும் வகையில் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை (IPD Serdang) 09-8074 2222 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்," என அவர் பொது மக்களை வலியுறுத்தினார்.

முன்னதாக, கருப்பு நிற கார் ஒன்று எதிர் திசையில் வேகமாக வந்து, டேஷ்கேம் (dashcam) பொருத்தப்பட்ட மற்றொரு வாகனத்துடன் மோதும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.