ஷா ஆலம், ஏப்ரல் 6 - நாட்டில் நிலவி வரும் வெப்பமான காலநிலையைச் சமாளிக்கும் நோக்கில், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு (NRES), மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) மூலம் இன்று முதல் வியாழக்கிழமை வரை மேக விதைப்பு நடவடிக்கையை (OPA) மேற்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கை, வெப்ப அலையின் தாக்கத்தைக் குறைக்கும் ஒரு செயல்திட்ட முயற்சியாகத் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) மற்றும் ராயல் மலேசிய விமானப்படை (TUDM) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
பேராக், கெடா, பெர்லிஸ் மற்றும் ஜோகூரில் உள்ள முக்கிய அணைகளில் இந்த நடவடிக்கை கவனம் செலுத்தும் என்று இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்தர் ஜோசப் குரூப் கூறினார்.
நீண்டகாலமாக நிலவும் வெப்பமான காலநிலையால் வீட்டு உபயோகம் மற்றும் விவசாயத் துறைக்கான நீர் விநியோகம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
"வீட்டு உபயோகம் மற்றும் விவசாயத்திற்கான நீர் விநியோகத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, முக்கிய அணைகளில் இந்த மேக விதைப்பு கவனம் செலுத்தும்," என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, கெடாவின் கோத்தா ஸ்டார், தற்போது இரண்டாம் நிலை அல்லது வெப்ப அலை நிலையில் உள்ளது. இங்கு தினசரி அதிகபட்ச வெப்பநிலை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு 37 டிகிரி செல்சியஸிலிருந்து 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.
மேலும், பெர்லிஸ், கெடா, கிளந்தான், பேராக், பகாங் மற்றும் ஜோகூரில் உள்ள பல பகுதிகள் முதல் நிலை (எச்சரிக்கை) நிலையில் உள்ளன. இங்கு வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.
இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கங்கள், முக்கிய அணைகளின் நீர் மட்டத்தை உயர்த்துவதும், சுற்றுச்சூழல் அமைப்பின் ஈரப்பதத்தை அதிகரிப்பதும் ஆகும் என ஆர்தர் மேலும் விளக்கினார்.
"இது காட்டுத் தீ மற்றும் கரி நிலத் தீ அபாயங்களைக் குறைக்க உதவும்," என்றார் அவர்.
இருப்பினும், இந்த மேக விதைப்பு நடவடிக்கையின் வெற்றி, பொருத்தமான குமுலஸ் மேகங்கள் மற்றும் குறைந்த காற்றின் வேகம் உட்பட சாதகமான வளிமண்டல சூழலைப் பொறுத்தது என்றும் அவர் வலியுறுத்தினார்.
"துல்லியமான இலக்கு இடங்களைத் தீர்மானிக்க, மெட்மலேசியாவின் தொழில்நுட்பக் குழுவினர் வானிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணிப்பார்கள்," என்றார்.
எனவே, நண்பகல் வேளைகளில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளவும், போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், தொப்பி அல்லது குடை போன்ற சுய பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்தவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதே நேரத்தில், காற்றின் தரம் மற்றும் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையைப் பாதுகாக்க, தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும், திறந்தவெளியில் எரிப்பதைத் தவிர்க்கவும் சமூகம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நாட்டில் நிலவி வரும் வெப்பமான காலநிலையைச் சமாளிக்க மேக விதைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது
6 ஏப்ரல் 2026, 10:00 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
3 மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை
Bernama
28 ஆகஸ்ட் 2026

national
சிலாங்கூர் உட்பட பல மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை: மெட்மலேசியா
Bernama
16 ஆகஸ்ட் 2026

national
குறைவான மழையால் புகை மூட்டம் 2-5 தினங்களுக்கு நீடிக்கும் : வானிலை ஆய்வுத் துறை
Bernama
13 ஆகஸ்ட் 2026

national
சிலாங்கூரின் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: மெட்மலேசியா
Media Selangor Team
11 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



