ஜாலான் கிள்ளான் லாமாவில் காரை எதிர்த்திசையில் செலுத்திய இ-ஹெய்லிங் ஓட்டுநருக்குச் சிறை மற்றும் அபராதம்

6 ஏப்ரல் 2026, 8:37 AM
ஜாலான் கிள்ளான் லாமாவில் காரை எதிர்த்திசையில் செலுத்திய இ-ஹெய்லிங் ஓட்டுநருக்குச் சிறை மற்றும் அபராதம்

கோலாலம்பூர், ஏப்ரல் 6 – ஜாலான் கிள்ளான் லாமாவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி காரை எதிர்த்திசையில் செலுத்தியது தொடர்பாக சமூக ஊடகங்களில் காணொளி வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட இ-ஹெய்லிங் (e-hailing) ஓட்டுநருக்கு மூன்று நாட்கள் சிறைத்தண்டனையும் 6,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இன்று கோலாலம்பூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி டி.ஜி. ஷாஸ்வானி யாஸ்மின் துவான் ரோஸ்லான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட 32 வயதுடைய வோங் கோக் கோங், கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி காலை 9.44 மணியளவில் தனது புரோட்டோன் சாகா காரைப் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் ஓட்டியதை ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அவருக்கு இன்று முதல் மூன்று நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவர் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் வரை சிறையில் இருக்க நேரிடும் என்றும் எச்சரித்தது.

மேலும், அவரது ஓட்டுநர் உரிமம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது. 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டப் பிரிவு 42(1)-ன் கீழ் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமக்குக் குடும்பப் பிரச்சனைகள் இருந்ததால் அந்தச் சமயத்தில் மனநிலை சீராக இல்லை என்றும், எனவே தண்டனையைக் குறைக்குமாறும் வழக்கறிஞர் இன்றி நீதிமன்றத்தில் முன்னிலையான வோங் கோக் கோங் முறையிட்டார். இருப்பினும், மற்ற சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உரியத் தண்டனை வழங்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர் நூர் பத்ரிஸ்யா முகமட் ராசிப் வாதிட்டார்.

கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை (JSPT) நடத்திய ஆய்வின்படி, ஜாலான் கிள்ளான் லாமா சந்திப்பில் இருந்து ஜாலான் கூச்சாய் லாமா சந்திப்பு வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு அந்த ஓட்டுநர் காரை எதிர்த்திசையில் செலுத்தியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.