ஷா ஆலம், ஏப்ரல் 3 - நாட்டில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு குறித்து சமூக ஊடகங்களில் போலித் தகவல்களைப் பரப்பியதாகச் சந்தேகிக்கப்படும் 17 நபர்களிடம் மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அந்த ஆணையம், இன்றுவரை 8 நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதில் ஐந்து வழக்குகள் எரிபொருள் விலை உயர்வு தொடர்பான வதந்திகள் குறித்தும், மூன்று வழக்குகள் புதிய மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான போலித் தகவல்கள் குறித்தும் பதிவாகியுள்ளன. எஞ்சியுள்ள ஒன்பது நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விசாரணைகள் அனைத்தும் 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டப் பிரிவு 233-இன் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. இச்சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 5 லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
டிஜிட்டல் தளங்களைத் தவறாகப் பயன்படுத்தி பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் செயல்களைத் தாம் மிகவும் தீவிரமாகப் பார்ப்பதாக எம்.சி.எம்.சி எச்சரித்துள்ளது.
இத்தகைய ஆதாரமற்ற தகவல்கள் மக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஆணையம், நாட்டின் சட்டதிட்டங்களை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளது.
பொதுமக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்த பின்னரே அவற்றைப் பகிர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








