கோலாலம்பூர், ஜூன் 21 - போலி மருத்துவ விடுப்பு சான்றிதழ் மோசடியைத் தடுக்க சுகாதார அமைச்சு e-MC எனப்படும் மின்னியல் முறையில் மருத்துவ விடுப்பு சான்றிதழை வெளியிடும் முறையை ஆராய்ந்து வருகிறது.
பாதுகாப்பான இலக்கவியல் தளத்தின் மூலமாக மின்னியல் மருத்துவ விடுப்பு முறையை மேம்படுத்தும் திட்டத்தை விரைவுப்படுத்த சுகாதார அமைச்சின் இலக்கவியல் பிரிவு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.
" மருத்துவ விடுப்பு சான்றிதழை,நோயாளியைப் பரிசோதிக்கும் மருத்துவர் அல்லது மருத்துவ அதிகாரியால் மட்டுமே வழங்க முடியும்.
அந்த விவகாரத்தில் முறைகேடு நிகழ்வதை கடுமையான ஒரு விவகாரமாக சுகாதார அமைச்சு கருதுகிறது."
எனவே, முறைகேடுகளைத் தடுக்க e-MC முறையை மேம்படுத்தும் தருணம் ஏற்பட்டிருப்பதாக சுல்கிப்ளி கூறினார்.
அண்மையில் பகாங், பெக்கானில், தாதி உட்பட ஐவர் போலி மருத்துவ விடுப்பு சான்றிதழ் விற்பனையில் ஈடுபட்டது தொடர்பில் கைதான சம்பவம் தொடர்பில் அமைச்சர் அவ்வாறு கருத்துரைத்தார்.
அதோடு, 2016-இல் இருந்து மருத்துவர், தனியார் கிளினிக் ஆகியவற்றின் பெயர்களை போலியாக்கி சான்றிதழை வெளியிடும் ‘Holiday Master’ கள்ள அகப்பக்க மோசடி கும்பலின் நடவடிக்கையும் கண்டறியப்பட்டுள்ளது. அச்சம்பவத்தை மலேசிய மருத்துவ சங்கம் விசாரித்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.







