ஜோகூர் பாரு, ஏப்ரல் 3 - ஜோகூர் பாரு, தாமான் தம்போய் உத்தாமாவில் உள்ள அல்-இன்ஷிரா அறிவியல் மஃஹாத் தஹ்ஃபிஸ் பள்ளியில் இன்று மாலை ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், அந்தப் பள்ளியின் தங்கும் விடுதியும் பல்நோக்கு மண்டபமும் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.
இந்தத் துயரச் சம்பவத்தின்போது பள்ளியில் இருந்த 15 மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் பெரும் பதற்றத்திற்கு உள்ளான போதிலும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதமின்றி தப்பினர்.
இன்று மாலை சுமார் 4:30 மணியளவில், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டிடத்தின் முதல் தளத்தில் குர்ஆன் வகுப்பில் இருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இது குறித்துப் பேசிய பள்ளியின் முதல்வர் முகமட் ஹலிமி கோலான், கட்டிடத்தின் மேல் தளத்திலிருந்து ஏதோ உடையும் சத்தம் கேட்டதாகவும், உடனே ஒரு ஆசிரியரை அனுப்பிச் சோதித்தபோது மேல்தளம் முழுவதும் கரும்புகையுடன் தீப்பற்றி எரிவது தெரியவந்ததாகவும் கூறினார்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த முதல்வர், உடனடியாக மாணவர்கள் அனைவரையும் வெறும் கையுடன் கட்டிடத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளார். கட்டிடத்தில் இருந்த தீத்தடுப்பு கதவுகள் தீ விரைவாகப் பரவாமல் தடுத்ததால், அனைவரும் பாதுகாப்பாக வெளியேற முடிந்தது.
தற்போது தங்கும் விடுதி மற்றும் கட்டில்கள் உள்ளிட்ட உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகிவிட்டதால், 15 மாணவர்களும் முதல்வரின் சொந்த இல்லத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்தபோது மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டிகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருந்த நிலையில், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 2011-ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்தத் தஹ்ஃபிஸ் பள்ளிக்கு உதவ விரும்புவோர், மேபேங்க் (Maybank) கணக்கு எண் 551342112113 (Maahad Tahfiz Sains Al Insyirah) வாயிலாக நிதி உதவி வழங்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜொகூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு மாலை 4:35 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, லார்கின் மற்றும் கெம்பாஸ் நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மூன்று அடுக்குக் கொண்ட அந்த நிரந்தரக் கட்டிடத்தின் மேல் தளத்தில் பற்றிய தீயை, சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மாலை 6:09 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








