ஷா ஆலாம், ஜூலை 9 - பந்திங்கில் உள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை மாணவி ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவமானது, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் பாதுகாப்பு அம்சங்களை மேலும் பலப்படுத்துவதற்கான ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டும்.
இதனை தேசிய பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டுமன்ற (PIBGN) தலைவர் அசோசியேட் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமது அலி ஹசன் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய கொடூரமான சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருக்க கல்வி அமைச்சு (KPM), பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் சமூகம் என அனைத்துத் தரப்பினரின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பும் முழுமையான ஒத்துழைப்பும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து முறையான மற்றும் தீவிரமான விசாரணை நடத்தி, அதன் பின்னணியில் உள்ள மூலக்கராணத்தைக் கண்டறியப் பாதுகாப்புத் துறையினருக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட PIBGN, இந்த வழக்கின் விசாரணை முடிவுகளையும் குற்றவாளிக்கான தண்டனையையும் பொதுவெளியில் விரிவாக அறிவிக்க வேண்டும் என்றது. அதுவே மற்ற மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் ஒரு பெரிய பாடமாக அமையும்
பள்ளிகளில் பாதுகாப்பை உறுதி செய்யக் கல்வி அமைச்சு சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்த முகமது அலி ஹசன், மாணவர்களின் பள்ளிப் பைகளை திடீர் சோதனைகளுக்கு (Random checks) உட்படுத்த வேண்டும் என்றார்.
அதோடு, பள்ளிகளில் அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது, ஒழுக்கீனம் பகடிவதைக் கொடுமைகளால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கும் மாணவர்களை முன்கூட்டியே அடையாளம் காண உதவும்.
மேலும், பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுமே தங்களை ஒரு ஒழுங்குமுறை ஆசிரியராகக் (Guru Disiplin) கருதிச் செயல்பட வேண்டும்; இந்த பொறுப்பை ஒரு குறிப்பிட்ட ஆசிரியரிடம் மட்டும் ஒப்படைத்துவிடக் கூடாது என்றும் அவர் கூறினார்.
மாணவர்களைப் பாடத்திட்டம் தாண்டிய புறப்பாட நடவடிக்கைகளில் (Kokurikulum) அதிகமாக ஈடுபட ஊக்குவிப்பதுடன், பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அளவில் ஆலோசனை வழிகாட்டிகள் இருப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளியின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்குப் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் (PIBG) முன்னாள் மாணவர் சங்கங்களும் (Alumni) இன்னும் தீவிரமாகப் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.







