ஷா ஆலம், ஏப்ரல் 1: ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் மலேசியக் கப்பல்களுக்கு எந்தவிதமான சுங்கக் கட்டணமும் விதிக்கப் படாது என்று போக்குவரத்து அமைச்சர் உறுதிப் படுத்தியுள்ளார்.

அந்தோனி லோக்கின் கூற்றுப்படி, மேற்கு ஆசியாவில் மோதல் நிலவி வந்தாலும், அந்த ஜலசந்தி வழியாகச் செல்லும் மலேசியக் கப்பல்களின் பாதுகாப்பிற்கு ஈரான் அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.
"மலேசியக் கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடந்து செல்ல ஈரான் அரசாங்கம் தனது முழுமையான அர்ப்பணிப்பையும் நம்பிக்கையையும் வழங்கியுள்ளது.
"மலேசியா ஒரு நட்பு நாடாகக் கருதப் படுவதாலும், வலுவான தூதரக உறவுகளைக் கொண்டிருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப் பட்டதாக மலேசியாவுக்கான ஈரான் தூதர் வாலியோல்லா முகமதி நஸ்ரபாடி நேற்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்," என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்த மோதலால் பெரிய இடையூறுகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், எரிபொருள் விலை உயர்வால் தளவாட மற்றும் போக்குவரத்துத் துறைகள் பாதிக்கப் பட்டுள்ளன என்று அந்தோனி மேலும் தெரிவித்தார்."உதாரணமாக, விமானப் போக்குவரத்துத் துறை எரிபொருள் விலை உயர்வை எதிர்கொள்கிறது.
இதனால், பயணப் பாதைகள் மற்றும் சேவைகளின் எண்ணிக்கையை மறு ஆய்வு செய்து, தங்கள் செயல்பாடுகளை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.
"ஜெட் எரிபொருள் விலை உயர்வும், அதிக செயல் திறனை உறுதி செய்வதற்காக விமானச் சேவைகளை ஒருங்கிணைக்க நிறுவனங்களை நிர்ப்பந்திக்கக் கூடும்," என்று அவர் கூறினார்.








