ஷா ஆலம், ஏப்ரல் 1: கடந்த ஞாயிற்றுக்கிழமை கிள்ளான், ஜாலான் ராயா பாராட்டில் நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டியைக் கொன்றதாக ஒரு தொழில்நுட்ப வல்லுநர் மீது இன்று கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 28 வயதான ஆர். சக்தி கணபதிக்கு வழக்கறிஞர் எவரும் முன்னிலையாக வில்லை.
மது மற்றும் போதைப்பொருள் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக மாஜிஸ்திரேட் ஏ.கார்த்தியாயினி முன்னிலை குற்றச்சாட்டு வாசிக்கப் பட்டபோது, அவர் புரிந்து கொண்டதாகத் தலையசைத்தார்.
குற்றச் சாட்டின்படி, கடந்த மார்ச் 29ஆம் தேதி காலை 11.47 மணியளவில், சம்பந்தப்பட்ட இடத்தில் 33 வயதான அமிருல் ஹபீஸ் ஓமாரின் மரணத்திற்கு அவர் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 ஆண்டுகளுக்குக் குறையாமலும் 40 ஆண்டுகளுக்கு மிகாமலும் சிறைத் தண்டனையை வழங்கும் தண்டனைச் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப் படுகிறது.
மரண தண்டனை விதிக்க படாவிட்டால், குற்றவாளிக்குக் குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த சம்பவத்தில், கிள்ளான் நகரை நோக்கிச் செல்லும் எதிர் திசை சாலையில் சந்தேக நபரால் கண்மூடித்தனமாக ஓட்டி வரப்பட்ட கார் மோதியதில், அமிருல் ஹபீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், கார் ஓட்டுநர் எதிர் திசையில் பல வாகனங்களை முந்திச் செல்ல முயன்றபோது, பாதிக்கப்பட்ட அமிருல் ஹபீஸ் ஓமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது தெரியவந்துள்ளது.இந்த மோதலில், பாதிக்கப்பட்டவர் பெரோடுவா மைவி கார் மீது தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.








