எஸ்.பி.எம் 2025 : சாதனை படைத்த மாணவர்களுக்குப் பிரதமர் பாராட்டு; தோல்வியைக் கண்டு துவள வேண்டாம் என அறிவுரை

31 மார்ச் 2026, 9:06 AM
எஸ்.பி.எம் 2025 : சாதனை படைத்த மாணவர்களுக்குப் பிரதமர் பாராட்டு; தோல்வியைக் கண்டு துவள வேண்டாம் என அறிவுரை

கோலாலம்பூர், மார்ச் 31 - இன்று வெளியிடப்பட்ட 2025-ஆம் ஆண்டிற்கான மலேசியக் கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்) தேர்வில் சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது குறித்துத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மாணவர்கள் தங்களின் எதிர்காலப் பயணத்தை மிகுந்த உறுதியுடனும் நம்பிக்கையுடனும் தொடர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வித் துறையில் மாணவர்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும், அறிவு, விழுமியங்கள் மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறந்த நாட்டை உருவாக்குவதில் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், இத்தேர்வில் எதிர்பார்த்த முடிவுகளைப் பெறாத மாணவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் மனச்சோர்வு அடைய வேண்டாம் என்றும் அவர் அன்புடன் கேட்டுக்கொண்டார்.

வாழ்க்கைப் பயணம் இன்னும் நீண்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், அயராத உழைப்பைக் கொடுப்பவர்களுக்கு மீண்டும் எழுந்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் எப்போதும் திறந்தே இருக்கும் என நம்பிக்கை ஊட்டினார்.

"நாட்டின் கல்வி முறை உங்கள் ஒவ்வொரு அடியையும் ஆதரிக்கத் தயாராக உள்ளது. ஒரு தேர்வு முடிவு மட்டும் உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானித்துவிடாது; தொடர்ந்து முன்னேறி வெற்றி பெற வேண்டும் என்ற உங்கள் உறுதியே வெற்றியைத் தீர்மானிக்கும்," என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

2025-ஆம் ஆண்டு எஸ்பிஎம் முடிவுகள், கடந்த ஆண்டை விடச் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. தேசிய சராசரி தரம் (GPK) 4.42-ஆகப் பதிவாகியுள்ளது.

கல்விப் பணிப்பாளர் நாயகம் டத்தோ டாக்டர் முகமட் அசாம் அகமட் வெளியிட்ட தகவலின்படி, அனைத்துப் பாடங்களிலும் ஏ+, ஏ மற்றும் ஏ- (A+, A, A-) தரங்களைப் பெற்று 13,779 மாணவர்கள் இம்முறை மிகச்சிறந்த சாதனை படைத்துள்ளனர். இது கடந்த 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.55 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.