ஷா ஆலம், மார்ச் 31: 2025-ஆம் ஆண்டிற்கான மலேசியக் கல்விச் சான்றிதழ் (எஸ்.பி.எம்) தேர்வு முடிவுகள் இன்று நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
இத்தேர்வினை எழுதிய 4 இலட்சத்து 13 ஆயிரத்து 299 மாணவர்கள் தங்களின் கடின உழைப்பிற்கான பலனை இன்று அறிந்து கொள்ளவுள்ளனர். நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 3,350 தேர்வு மையங்களில் இம்மாணவர்கள் தேர்வெழுதியதாக மலேசியக் கல்வி அமைச்சு (KPM) முன்னதாகத் தெரிவித்திருந்தது.
பள்ளி மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை இன்று காலை 10 மணி முதல் அந்தந்தப் பள்ளிகளுக்குச் சென்று நேடியாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளையில், தனிப்பட்ட தேர்வர்களாக (Private Candidates) பதிவு செய்தவர்கள், தாங்கள் பதிவு செய்த மாநிலக் கல்வித் துறையை (JPN) அணுகி தங்களின் முடிவுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வு முடிவுகளை வழங்கும் நடைமுறைகள் மிகவும் திறமையாகவும், சீராகவும் நடைபெறுவதை அந்தந்தப் பள்ளி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக்குச் செல்ல இயலாத மாணவர்கள் மற்றும் கூடுதல் வசதிக்காக, இணையம் வாயிலாகவும் முடிவுகளைச் சரிபார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்கள் இன்று காலை 10 மணி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி மாலை 6 மணி வரை myresultspm.moe.gov.my என்ற அகப்பக்கத்தின் வாயிலாகத் தங்களின் முடிவுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும், குறுந்தகவல் (SMS) மூலமாகவும் எளிதாக முடிவுகளை அறியலாம். மாணவர்கள் SPM<இடைவெளி>அடையாள அட்டை எண்<இடைவெளி>தேர்வு எண் எனத் தட்டச்சு செய்து 15888 என்ற எண்ணிற்கு அனுப்பி வைப்பதன் மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை உடனடியாகப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தச் சேவையும் இன்று காலை தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.








