ஷா ஆலம், மார்ச் 31: கிள்ளான், ஜாலான் ராயா பாராட் பகுதியில் குடிபோதை ஓட்டுநரால் மோதி கொல்லப்பட்ட மோட்டார் சைக்கிளோ-ட்டியின் குடும்பத்தினருக்கு மாநில அரசு உரிய உதவிகளை வழங்கும்.
மகளிர் மற்றும் சமூக நல ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி, சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர், தாமும் சமூகநலத் துறையினரும் (ஜேகேஎம்) நேரில் சென்று ஆறுதல் கூறவிருப்பதாகத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“பேராவில் குடும்பத்தின் காரியங்கள் முடிந்ததும் நாங்கள் அவர்களைச் சந்திப்போம். குடும்பத்தின் முக்கிய வருமானம் ஈட்டுபவராக இருந்த அவர், குடும்பத்தைக் காப்பாற்ற இரண்டு வேலைகளைச் செய்து வந்துள்ளார்.
எனவே, இன்னும் பள்ளிக்குச் செல்லும் பிள்ளை களின் நலன் மற்றும் கணவனை இழந்த மனைவியின் எதிர்காலம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
"பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கள் வாழ்க்கையை நிலையானதாகத் தொடர நிதி உதவி, வேலை வாய்ப்புகள் மற்றும் திறன் ஆதரவு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் மாநில அரசு ஆராயும்," என்று அவர் கூறினார்.
இங்குள்ள ஜூப்லி பேராக்மண்டபத்தில் இன்று நடைபெற்ற 'டவுன்ஹால் X ராயா வனிதா சிலாங்கூர்' நிகழ்ச்சியில் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் அவரது மனைவி டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முஹமட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
முன்னதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டதாகவும், ஆனால் சந்திப்பிற்கு அவர்கள் இன்னும் தயாராக இல்லை என்ற அவர்களது வேண்டுகோளுக்கு மதிப்பளித்ததாகவும் அன்ஃபால் விளக்கினார்.
அதே நேரத்தில், குடும்பத் தலைவரை இழந்த பிறகு குடும்பத்தினர் சுயமாக வாழ உதவும் வகையில் ஒரு இழப்பீட்டு முறையைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் அன்ஃபால் கருத்து தெரிவித்தார்.
குடிபோதை ஓட்டுநர்கள் சம்பந்தப்பட்ட விபத்துகள் குறித்து கருத்துரைத்த அவர், தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவது உட்பட, அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மதுபான விற்பனைக் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்தல் மற்றும் மது அருந்தியவர்கள் வாகனம் ஓட்டுவதில்லை என்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட தற்போதைய சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.
முன்னதாக, கிள்ளான், ஜாலான் ராயா பாராட் பகுதியில் மோட்டார் சைக்கிளோட்டியின் மரணத்திற்கு காரணமான, மது மற்றும் போதைப்பொருள் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டியதாக நம்பப்படும் ஆடவர் நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று முதல் வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கிள்ளான் தெற்கு மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் லிம் ஜிட் ஹுய் தெரிவித்தார்.








