கோலாலம்பூர், மார்ச் 31: கூலிம் ஹைடெக் பார்க்கில் (KHTP) உள்ள ஒரு தொழிற்சாலை கட்டுமானத் தளத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் சம்பந்தப்பட்ட விசாரணை வெளிப் படையாகவும், தொழில் முறையாகவும் நடத்தப்பட வேண்டும் என்று மலேசிய ஊடக மன்றம் (MMM) வலியுறுத்தியுள்ளது.
மேலும், தேவையற்ற குறுக்கீடுகள் அல்லது அழுத்தங்கள் இன்றி ஊடகவியலாளர்கள் தங்கள் பணிகளைச் செய்வதற்கான உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும் அது கேட்டுக்கொண்டது.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் தேவை மற்றும் பொருத்தப்- பாடு கொள்கைகளின் அடிப்படையில் கடுமையாக மதிப்பிடப்பட வேண்டும் என்றும், உண்மையான சட்ட மீறல்களுக்கும் முறையான பத்திரிகைப் பணிகளுக்கும் இடையில் தெளிவாக வேறுபடுத்துவது முக்கியம் என்றும் MMM தெரிவித்துள்ளது.
"பல சூழ்நிலைகளில், சம்பவ இடத்தில் இருப்பது, அவதானிப்பது மற்றும் தகவல்களைப் பெறுவது போன்ற பத்திரிகைப் பணிகள், பொது நலன் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி செய்தி வெளியிடும் ஊடகங்களின் முறையான செயல்பாட்டின் ஒரு பகுதியாகும் என்பதை MMM வலியுறுத்துகிறது.
"எனவே, ஊடகவியலாளர்களின் கடமையை குற்றமாக்காமல் இருப்பதை உறுதி செய்ய, செய்தி சேகரிப்புப் பணியின் பின்னணியில் 'அத்துமீறல்' என்ற வார்த்தையின் விளக்கம் கவனமாக தெளிவுபடுத்தப்பட வேண்டும்," என்று அது நேற்று இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டது.
மேலும், இந்த வழக்கின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணிப்பதாகவும் அது கூறியது.பொது நலன் சார்ந்த இடங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் அணுகல் குறித்தும், அதிகாரிகள் மற்றும் ஊடகப் பயிற்சியாளர்களுக்கு இடையில் தெளிவான வழிகாட்டுதல்களின் அவசியம் குறித்தும் இந்த வழக்கு பரந்த கேள்விகளை எழுப்பியுள்ளதாக MMM தெரிவித்தது.
முன்னதாக, 'தினத்தந்தி' என்ற தமிழ்ச் செய்தி இணையதளத்தின் ஊடகவியலாளர் காளிதாஸ் சுப்பிரமணியம், சட்டவிரோத குடியேறிகள் தொடர்பான செய்தியை சேகரித்தபோது அத்துமீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கூலிம் மாவட்ட காவல்துறை தலைமை-யகத்தில் (IPD) தடுத்து வைக்கப் பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கடந்த புதன்கிழமை அந்தத் தொழிற்சாலை கட்டுமானத் தளத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, ஒரு ஊடகவியலாளர் உட்பட 10 ஆடவர்களைக் கைது செய்ததை காவல்துறை உறுதிப் படுத்தியுள்ளது.








