இந்தோனேசியா, மார்ச் 29 - இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற செமேரு எரிமலை, இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ஒன்பது முறை வெடித்ததாகப் பதிவாகியுள்ளது.
இந்தத் தொடர் வெடிப்புகளில் மிக அண்மைய நிலவரப்படி, எரிமலையின் உச்சியிலிருந்து சுமார் 800 மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் மேகங்கள் சீறிப் பாய்ந்ததோடு, அதன் தென்கிழக்குச் சரிவுகளில் 3.5 கிலோமீட்டர் தூரம் வரை எரிமலைக் குழம்புகள் மற்றும் பாறைத் துகள்கள் (pyroclastic flows) வழிந்தோடி வருகின்றன.
ஜாவா தீவின் மிக உயர்ந்த எரிமலையான செமேரு, இன்று நள்ளிரவு 12:21 மணி முதலே சீறத் தொடங்கியதாக அதன் கண்காணிப்பு நிலைய அதிகாரி முக்தாஸ் சோஃபியான் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 8:49 மணியளவில் பதிவான ஒன்பதாவது வெடிப்பின் போது, அடர்த்தியான சாம்பல் துகள்கள் தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்தன. சுமார் நான்கு நிமிடம் நீடித்த இந்த வெடிப்புச் சம்பவத்தின் போது, நில அதிர்வு அளவீடுகள் அதிகபட்சமாக 22 மில்லி மீட்டர் வரை பதிவாகியுள்ளதாக அன்தாரா (ANTARA) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக இன்று அதிகாலை 1:01 மணியளவில் நிகழ்ந்த வெடிப்பே மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது; அப்போது எரிமலைச் சாம்பல் சுமார் 1,000 மீட்டர் உயரம் வரை எழும்பியது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி, செமேரு எரிமலை இன்னும் 'நிலை 3' (Status Tahap III - Awas) எனும் அபாய எச்சரிக்கை அளவிலேயே நீடிக்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெசுக் கொபோகன் (Besuk Kobokan) வழியே தென்கிழக்கு திசையில் 13 கிலோமீட்டர் தொலைவிற்குள் பொதுமக்கள் எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், எரிமலைக் குழம்பு மற்றும் லாவா ஆறுகள் 17 கிலோமீட்டர் தூரம் வரை பாயும் அபாயம் இருப்பதால், ஆற்றங்கரையோரங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எரிமலை வாயிலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் பாறைச் சிதறல்கள் விழக்கூடும் என்பதால், அந்தப் பகுதிக்குள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








