ஷா ஆலம், மார்ச் 29 - பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடானில் உள்ள ஜாலான் PJS 2D/12 பகுதியில் நேற்று மாலை நிகழ்ந்த பயங்கரத் தீ விபத்தில் இரண்டு மாடி வீடுகள் தீக்கிரையாகின.
இந்தச் சம்பவம் குறித்துச் சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுத் துணை இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நேற்று மாலை 5.34 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அடுத்த எட்டாவது நிமிடத்திலேயே முதல் மீட்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சுமார் 20-க்கு 30 சதுர அடி பரப்பளவு கொண்ட இரண்டு 'கிளாஸ் ஏ' (Class A) ரக மாடி வீடுகள் இந்தத் தீ விபத்தில் சிக்கின. இதில் முதல் வீடு சுமார் 80 விழுக்காடும், இரண்டாவது வீடு 50 விழுக்காடும் தீயால் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் எவருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தீயணைப்புப் பணியில் ஜாலான் பெஞ்சாலா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள், பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயா நிலையங்களின் உதவியுடன் ஈடுபட்டனர். மூத்த தீயணைப்பு அதிகாரி முகமட் ஷாருல் நிஜாம் ஷம்சுடின் தலைமையில் மொத்தம் 21 வீரர்கள் இந்தப் பணியில் துரிதமாகச் செயல்பட்டனர்.
தீயைக் கட்டுப்படுத்தவும் முழுமையாக அணைக்கவும் நான்கு முக்கியத் தீயணைப்பு வாகனங்கள், அவசர மருத்துவ மீட்பு வாகனம் (EMRS) மற்றும் ஒரு தண்ணீர் தாங்கி வாகனம் ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
மாலை வரை தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தீ விபத்திற்கான காரணம் குறித்துப் புலனாய்வுத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








