ஷா ஆலம், மார்ச் 29 - மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் ஹார்முஸ் நீர்ச்சந்தி (Strait Hormuz) மூடப்பட்டிருந்தாலும், மலேசியாவின் நெல் உர விநியோகம் பாதிக்கப்படாது என தேசிய விவசாயிகள் சங்கம் (NAFAS) இன்று தெரிவித்துள்ளது.
தனது துணை நிறுவனமான மலேசிய என்.பி.கே ஃபெர்டிலைசர் (MNFSB) மூலம், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரையிலான உர உற்பத்திக்குத் தேவையான கச்சாப் பொருட்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக அந்த அமைப்பு உறுதி அளித்துள்ளது.
சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நெற்பயிர் விவசாயிகளை உள்ளடக்கிய கூட்டரசு அரசின் பல்வேறு மானியத் திட்டங்களுக்கு (SBPKP, SIPP, SBRPB) இந்த விநியோகம் தடையின்றி சென்றடைவதை நாஃபாஸ் உறுதி செய்துள்ளது. .
.உள்நாட்டு மூலங்களிலிருந்து பெறப்படும் யூரியா, மற்றும் சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா, மொராக்கோ போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாஸ்பேட் மற்றும் கனடா, ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து பெறப்படும் பொட்டாசியம் எனப் பலதரப்பட்ட மூலங்களைக் கொண்டிருப்பதாலேயே இந்த நிலைத்தன்மை சாத்தியமாகியுள்ளது.
இருந்தபோதிலும், உலகளாவிய சூழலால் உர விலையில் சில அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதை நாஃபாஸ் சுட்டிக்காட்டியுள்ளது. ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஈரான் போன்ற முக்கிய உற்பத்தி நாடுகள் உலகளாவிய உரச் சந்தையைத் தீர்மானிப்பதால், தற்போதைய மோதல்கள் காரணமாகக் கச்சாப் பொருட்களின் விலை 40 விழுக்காடு அல்லது அதற்கும் மேலாக உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு மற்றும் கப்பல் காப்பீட்டுக் கட்டணங்கள் அதிகரிப்பு போன்றவை ஒட்டுமொத்த விற்பனைச் செலவை உயர்த்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சவால்களை எதிர்கொள்ள அரசின் தலையீடு மிகவும் அவசியம் என வலியுறுத்தியுள்ள நாஃபாஸ், சர்வதேச அளவில் மூலோபாயப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது நாட்டின் உர விநியோகத் தொடர்ச்சியை உறுதி செய்ய உதவும் என்று கூறியுள்ளது.
ஒரு நீண்ட காலத் தீர்வாக, உலகளாவிய கச்சாப் பொருள் உற்பத்தியாளர்களுடன் இணைந்து செயல்படவும், உள்நாட்டிலேயே உற்பத்தி வசதிகளை மேம்படுத்தவும் திட்டமிட்டு வருவதன் மூலம் நாட்டின் உரத் துறை மற்றும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என அந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.








