ஷா ஆலம், மார்ச் 29 - முகநூலில் விளம்பரப்படுத்தப்பட்ட போலியான முதலீட்டுத் திட்டத்தை நம்பி, 61 வயதுடைய ஓய்வூதியதாரர் ஒருவர் சுமார் 337,457 ரிங்கிட் பணத்தை இழந்துள்ளதாகப் பகாங் மாநிலக் காவல்துறை தலைமைத் தலைவர் டத்தோ ஸ்ரீ யாயா ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி 29-ஆம் தேதி சமூக ஊடகமான முகநூலில் காணப்பட்ட கவர்ச்சிகரமான முதலீட்டு விளம்பரம் ஒன்றின் மூலம் இந்த மோசடி அரங்கேறியுள்ளது. வெறும் 300 ரிங்கிட் முதலீடு செய்தால், 14,000 ரிங்கிட் வரை லாபம் ஈட்டலாம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி பாதிக்கப்பட்ட நபர் இதில் இணைந்துள்ளார்.
பின்னர், வாட்ஸ்அப் செயலி வழியாகத் தொடர்புகொண்ட மர்ம நபர்களின் வழிகாட்டுதலின்படி, கடந்த ஜனவரி 30 முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை மொத்தம் 16 வெவ்வேறு வங்கிச் கணக்குகளுக்கு 38 முறை பணப்பரிமாற்றம் செய்துள்ளார்.
இந்தக் காலக்கட்டத்தில், முதலீடு தொடர்பான அனைத்து விவரங்களும் வாட்ஸ்அப் வழியாகவே பகிரப்பட்டுள்ளனவே தவிர, எவ்வித அதிகாரப்பூர்வ முதலீட்டுத் தளங்களும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டவருக்கு 392 ரிங்கிட் மட்டும் லாபமாக வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, ஈட்டிய லாபத்தைத் திரும்பப் பெறுவதற்கான கட்டணம் என்ற பெயரில் மேலும் 210,500 ரிங்கிட் செலுத்துமாறு அந்த கும்பல் கேட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அந்த முதியவர், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இழந்த பணம் அனைத்தும் பாதிக்கப்பட்டவரின் சேமிப்பு மற்றும் நகைகளை அடகு வைத்ததன் மூலம் திரட்டப்பட்டவை என்பது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டப் பிரிவு 420-இன் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற இணைய முதலீடுகளில் ஈடுபடும் முன், சம்பந்தப்பட்ட வங்கிச் கணக்குகளைச் சரிபார்க்க 'Semak Mule' இணையதளத்தைப் பயன்படுத்துமாறும், ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தால் உடனடியாக 997 என்ற தேசிய மோசடி தடுப்பு மையத்தை (NSRC) தொடர்புகொள்ளுமாறும் டத்தோ ஸ்ரீ யாயா ஒஸ்மான் வலியுறுத்தியுள்ளார்.








