குவாந்தான், பிப் 19: சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட போலியான பங்குச்சந்தை முதலீட்டுத் திட்டத்தை நம்பி, தனியார் துறை ஊழியர் ஒருவர் RM636,123 பணத்தை இழந்துள்ளார்.
57 வயதான அந்த நபர் வாட்ஸ்அப் செயலி வழியாக மோசடி கும்பலுடன் தொடர்பு கொண்டதாகப் பகாங் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஒஸ்மான் தெரிவித்தார்.
அதிக லாபம் தருவதாகக் கூறி, பாதிக்கப்பட்டவரை ஒரு முதலீட்டு செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு சந்தேக நபர்கள் தூண்டியுள்ளனர். அந்தச் செயலியில், கமிஷன் தொகையையும் சேர்த்து அவரது லாபம் RM1.84 மில்லியன் என போலியாகக் காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், அந்தப் பணத்தை அவர் திரும்ப எடுக்க முயன்றபோது, சந்தேக நபர்கள் பல்வேறு காரணங்களைக் கூறி, பணத்தை எடுப்பதற்கு முன் கூடுதல் கட்டணம் செலுத்துமாறு கேட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் ஜனவரி 9 முதல் பிப்ரவரி 11 வரை தனது சொந்தச் சேமிப்பு மற்றும் குடும்பத்தினரிடம் வாங்கிய கடன் தொகையை நான்கு வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள டத்தோஸ்ரீ யஹாயா, பொதுமக்கள் எந்தவொரு பணப் பரிவர்த்தனையையும் செய்வதற்கு முன் https://semakmule.rmp.gov.my/ என்ற இணையதளத்தில் கணக்கு எண்களைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், இத்தகைய மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 997 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தேசிய மோசடி மறுமொழி மையத்தின் உதவியைப் பெறலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


