சபா மீதான பிலிப்பீன்சின் உரிமை கோரிக்கையை நிராகரிக்கும் வகையில், மலேசியா கூடிய விரைவில் அந் நாட்டிற்கு ஒரு தூதரகக் குறிப்பை அனுப்பும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது ஹசான் கூறினார்.
சமீபத்தில் பிலிப்பீன்ஸ் செனட்டர் ராபின் படில்லா எழுப்பிய சபா உரிமை கோரிக்கை தொடர்பான அறிக்கைகள் வெளிவரும் ஒவ்வொரு முறையும் மலேசியா இத்தகைய தூதரக குறிப்புகளைத் தொடர்ந்து அனுப்பி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாட்டுச் சபையால் (PBB) அங்கீகரிக்கப் பட்ட சட்டப்பூர்வ செயல்முறையின் மூலம் சபா மக்கள் மலேசியாவுடன் இணைய முடிவெடுத்ததால், மலேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியாக சபாவின் நிலை இறுதியானது என்று அவர் மேலும் கூறினார்.
"இது ஒரு புதிய விஷயமல்ல. பல தசாப்தங்களாக, நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இந்த விவகாரம் எழுப்பப் படுகிறது.
பிலிப்பீன்ஸ் மக்களுக்கும் இது புரியும் என்று நான் நினைக்கிறேன். சில சமயங்களில் அரசியல்வாதிகள் மக்களின் பார்வையைத் திசை திருப்பக்கூடிய பிரச்சினைகளைத் தேடுகிறார்கள்," என்று அவர் கூறினார்."சபா இன்னும் அவர்களின் உரிமை கோரலுக்கு உட்பட்டது என்ற கேள்வி எழவில்லை. ஆனால் அவர்கள் அதை எழுப்ப விரும்பினால், அது அவர்களின் விருப்பம். நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, மாறாக எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்கிறோம்.
இது ஆதாரமற்றது, அதனால்தான் நாங்கள் எதிர்ப்பு குறிப்பை அனுப்பவில்லை, மாறாக உரிமை கோரிக்கையை நிராகரிக்கும் குறிப்பை அனுப்புகிறோம்," என்று அவர் விளக்கினார்.
ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமது ஹசான், இன்று ரந்தாவில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
இது போன்ற அறிக்கைகள் தனிநபர்களால் வெளியிடப்படுகின்றன என்றும், அவை பிலிப்பீன்ஸ் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கவில்லை என்றும், எனவே இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பாதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்."ஒரு செனட்டர் பேசியதால், பிலிப்பீன்ஸ் அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது.
இங்கே எதிர்க்கட்சிகள் பேசும்போது நம்மால் என்ன செய்ய முடியும்? அதிகம் செய்ய இயலாது. எனவே, பிலிப்பீன்ஸ் மற்றும் மலேசியாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது," என்று அவர் கூறினார்.
பல பேச்சுவார்த்தைகள் மற்றும் உரிமை கோரிக்கைகளுக்குப் பிறகும், மலேசியாவிற்கும் பிலிப்பீன்ஸிற்கும் இடையிலான நல்லுறவு ஒருபோதும் மோசமடைந்ததில்லை என்றும், மேலும் இந்த ஆண்டு பிலிப்பீன்ஸ் ஆசியான் தலைவராக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, இயற்கை வளம் நிறைந்த பிராந்தியமான சபா மீதான தனது நாட்டின் உரிமைக் கோரிக்கையை மீண்டும் நிலை நிறுத்துமாறு அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரை செனட்டர் படில்லா வலியுறுத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
#Toriginal news : https://mediaselangor.com/ms/2026/03/349628







