ஷா ஆலம், மார்ச் 27: சுற்றுலாப் பகுதிகளின் பாரம்பரியம் மற்றும் இயற்கை சூழலைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக, ஜனவரி 1, 2026 முதல் மாநில அரசு நிலைத்தன்மை கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சபாக் பெர்ணம் பகுதியைச் சுற்றியுள்ள தங்கும் விடுதி (ஹோம்ஸ்டே) உரிமையாளர்கள், வருகையாளர்களுக்குச் சுமையாக அமையாத வகையில், தங்களின் தனிப்பட்ட அணுகுமுறைகளுடன் அந்த நடைமுறையைச் சரிசெய்யத் தொடங்கியுள்ளனர்.
நுர் ஃபரிடா ஹோம்ஸ்டேவின் உரிமையாளர், முகமது கைரிலன்னுவார் அஸ்முடின், வாடிக்கையாளர்களின் வசதிக்காக அந்தக் கட்டணத்தை முன்பதிவு விலையிலேயே சேர்த்துவிடுவதாகக் கூறினார்.
"இந்த ஆண்டு நாங்கள் அதைச் செயல்படுத்தத் தயாராகிவிட்டோம். தற்போதைக்கு, 2 ரிங்கிட் கட்டணம் முன்பதிவு விலையில் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப விலை மாறக்கூடும்.
"அதே நேரத்தில், சுற்றுலாப் பகுதிகளின் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்காக நிலைத்தன்மை கட்டணம் வசூலிக்கப்படுவதன் நோக்கத்தை சுற்றுப்பயணிகள் புரிந்துகொள்ளும் வகையில், அவர்களுக்கு விளக்கமளிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறோம்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
கடந்த ஆண்டு சபாக் பெர்ணம் மாவட்ட மன்றத்துடன் (MDSB) நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில் பங்கேற்ற முகமட் கைரிலன்னுவார், பெரும்பாலான சிறு உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் தனியாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தயங்குவதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், சிமா ஹோம்ஸ்டேவின் உரிமையாளர், 39 வயதான நோர்ஹாஷிமா ஹாஷிம், பல தங்கும் விடுதிகளைக் கொண்ட பெரிய அளவிலான உரிமையாளர்களுக்கு இந்தக் கட்டணம் மிகவும் பொருத்தமானது என்று கருத்துத் தெரிவித்தார்.
“என்னைப் போன்ற சிறு உரிமையாளர்களுக்குப், புதிய கட்டணத்தைச் சேர்ப்பது சற்று கடினம். ஏனெனில் நாங்கள் கூடுதல் அலகுகள் அல்லது பிற துணை நடவடிக்கைகள் இல்லாமல், ஒரே ஒரு தங்கும் விடுதியை மட்டுமே வருமான ஆதாரமாக நம்பியுள்ளோம்.
"மேலும், நாங்கள் மிதிவண்டி அல்லது மோட்டார் சைக்கிள் வாடகை வசதிகள் இல்லாமல் அடிப்படை தங்குமிடத்தை மட்டுமே வழங்குகிறோம். எனவே, பல அலகுகளைக் கொண்ட உரிமையாளர்களுக்கு இந்த நிலைத்தன்மை கட்டணம் விதிக்கப்படுவது மிகவும் பொருத்தமானது," என்றார்.
ஹைசே ஹோம்ஸ்டேவின் உரிமையாளர், 52 வயதான சித்தி ஐனி காசே முகமது மிஸ்ரி, தனது தங்கும் விடுதியில் வழங்கப்படும் விலை நியாயமானதாக இருப்பதையும், வாடிக்கையாளர்களுக்குச் சுமையாக இல்லாததையும் உறுதி செய்வதற்காக, நிலைத்தன்மை கட்டணத்தைச் சேர்க்காமல் தற்போதைய கட்டணத்தையே நீடித்து வருவதாகக் கூறினார்.
“வாடிக்கையாளர்களின் ஆர்வத்தைப் பாதிக்க விரும்பாததால், இதுவரை நாங்கள் இந்தக் கட்டணத்தை விதிக்கவில்லை. மேலும், நாங்கள் மீன்பிடித்தல், நீச்சல் குளம் மற்றும் பூப்பந்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளையும் வழங்குகிறோம்.
"இருப்பினும், தேவை ஏற்பட்டாலோ அல்லது வாடிக்கையாளர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பு கிடைத்தாலோ, எதிர்காலத்தில் இந்தக் கட்டணம் அமல்படுத்தப்படலாம்," என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, சிலாங்கூர் மாநில சுற்றுலா ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இங் சு லிம், பாரம்பரியம் மற்றும் இயற்கை சூழலின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக ஜனவரி 1, 2026 முதல் பார்வையாளர்களுக்கு நிலைத்தன்மை கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
அவரது கூற்றுப்படி, ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்களால் கட்டண வசூலிப்பு முறை மேற்கொள்ளப்பட்டு, உள்ளூராட்சி மன்றங்களிடம் ஒப்படைக்கப்படும். அதில் ஒரு சிறிய பகுதி மாநில அரசுக்கு வழங்கப்படும்.








