ஷா ஆலம், 27 மார்ச்: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலையைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அடுத்த வாரம் அனைத்து மாநிலத் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கான சிறப்பு விளக்கக் கூட்டம் ஒன்றைக் கூட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு கவுன்சில் (MKN) மற்றும் தேசிய பொருளாதார நடவடிக்கை கவுன்சில் (MTEN) ஆகியவற்றின் மூலம் இந்தச் சிறப்பு விளக்கங்கள் அளிக்கப்படும் என்றும், இதன் வழி கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இன்று புக்கிட் ஜெலுத்தோங் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர், அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
தற்போது வரை நாட்டில் எரிபொருள் பங்கீடு (Rationing) செய்யப்படவில்லை என்றும், ரோன்95 (RON95) பெட்ரோல் விலையில் திடீர் உயர்வு ஏதும் இல்லை என்றும் அவர் உறுதியளித்தார்.
மேலும், மே மாதம் வரை அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு மற்றும் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்துள்ளதாகவும், நிலைமையை அன்றாடம் கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்கு ஆசியப் பிரச்சனையின் தாக்கங்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்துப் பேசிய பிரதமர், மாநிலத் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு ஒரு உறுதியான திட்டம் வகுக்கப்பட்ட பின்னரே இது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று பதிலளித்தார்.
அதே வேளையில், நாட்டின் எரிபொருள் இருப்பு மே மாதம் வரை உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்குப் போதுமானதாக உள்ளது என்பதையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
பெட்ரோனாஸ் (Petronas) நிறுவனம் வளைகுடா நாடுகளைத் தாண்டி பிரேசில், சுரினாம் மற்றும் கனடா போன்ற நாடுகளில் தனது முதலீடுகளைப் பன்முகப்படுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு உள்நாட்டுத் தேவைகள் ஈடுகட்டப்படுவதாகக் கூறினார்.
நம்மைச் சுற்றியுள்ள நாடுகள் இக்கட்டான சூழலைச் சந்தித்து வரும் வேளையில், நாம் தேவையற்ற அரசியல் விவாதங்களில் காலத்தை விரயமாக்காமல், மக்களின் நலனையும் நாட்டின் பாதுகாப்பையும் காப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.








