சிரம்பான், மார்ச் 27: கோலா பிலா, ரெம்பாங் பானாஸ் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள தொலைத்தொடர்பு கோபுர துணை மின்நிலையப் பகுதியில், முழுமையான உடல் வளர்ச்சி மற்றும் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தையின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
நேற்று மாலை 6.30 மணியளவில் உள்ளூர்வாசி ஒருவர் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கோலா பிலா மாவட்ட துணை காவல்துறை தலைவர் டிஎஸ்பி ஷாம்ரோல் ஷா ரம்லி தெரிவித்தார்.
பரிசோதனையில், குழந்தையின் உடல் அழுகத் தொடங்கிய நிலையில் இருந்தது என்றும், சுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
"குழதையின் உடலில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெளிக்காயங்கள் எதுவும் காணப்படவில்லை. மேலும், அக்குழதையின் அடையாளமும் இன்னும் கண்டறியப்படவில்லை.
மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது," என்று ஷாம்ரோல் ஷா வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
குழ்ந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோலா பிலா, துவாங்கு அம்ப்புவான் நஜிஹா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குற்றவியல் சட்டப் பிரிவு 318-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் கோலா பிலா மாவட்டக் காவல்துறை தலைமையகத்தை 06-4842999 என்ற எண்ணிலோ அல்லது விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் சுபியா இஷாக்கை 019-9933978 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு உதவுமாறு ஷாம்ரோல் ஷா கேட்டுக்கொண்டார்.








