கடும் வெப்பம் - பள்ளிகளைத் தற்காலிகமாக மூட கல்வி அமைச்சு அனுமதி

27 மார்ச் 2026, 7:36 AM
கடும் வெப்பம் - பள்ளிகளைத் தற்காலிகமாக மூட கல்வி அமைச்சு அனுமதி

ஈப்போ, மார்ச் 27: மலேசியாவில் நிலவி வரும் கடுமையான வெப்ப நிலை மற்றும் வறண்ட வானிலை காரணமாக, மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸைத் தாண்டினால் சம்பந்தப்பட்ட பள்ளிகளைத் தற்காலிகமாக மூடலாம் என்று கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்துள்ளார்.

இன்று ஈப்போவில் உள்ள கோபெங் தமிழ்ப்பள்ளிக்கு (SJKT Gopeng) அலுவல் ரீதியான வருகை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 37 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பம் நீடித்தால் இந்த நடவடிக்கையை எடுக்கலாம் என்று குறிப்பிட்டார்.

இந்த நடைமுறையானது கடந்த 2023-ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ் அமையும் என்றும், தற்போதைய சூழலைக் கையாள்வதில் மாநிலக் கல்வித் துறைகளுக்கும் பள்ளி நிர்வாகங்களுக்கும் போதிய அனுபவம் இருப்பதாகவும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

வானிலை மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து வரும் கல்வி அமைச்சு, மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறியுள்ளது.

மேலும், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்ப நிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸிற்கு இடைப்பட்ட அளவில் இருந்தால், பள்ளிகளில் நடைபெறும் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

இதன் அடிப்படையில், குறுக்கு ஓட்டப் பந்தயங்கள் (Cross-country), முகாம்கள், அணிவகுப்புப் பயிற்சிகள் மற்றும் இதர வெளிப்புற விளையாட்டுகள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் (PPD) தத்தம் பகுதிகளில் நிலவும் அன்றாட வெப்ப நிலையைத் துல்லியமாகக் கண்காணிக்குமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

வானிலை மோசமடையும் பட்சத்தில், முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பள்ளி நிர்வாகங்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.