போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை - ஈரான்

26 மார்ச் 2026, 8:55 AM
போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை - ஈரான்

இஸ்தான்புல், மார்ச் 26: அமெரிக்காவுடன் (AS) போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பேச்சுவார்த்தைகள் "தொடர்ச்சியாகவும்" "பயனுள்ளதாகவும்" இருப்பதாக வெள்ளை மாளிகை கூறிய போதிலும், இந்த மறுப்பை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார் என அரசு ஊடகத்தை மேற்கோள்காட்டி அனடோலு அஜன்சி செய்தி வெளியிட்டுள்ளது.

"அமெரிக்காவுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் எதுவும் இல்லை," என்று பிரஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் அராக்சி கூறினார்.

"அமெரிக்கா பல்வேறு இடைத்தரகர்கள் மூலம் செய்திகளை அனுப்புகிறது. இடைத்தரகர்கள் மூலம் செய்திகளைப் பரிமாறிக்கொள்வது பேச்சுவார்த்தையாகாது.
அவர்கள் இப்போது பேச்சுவார்த்தை பற்றி பேசுவதே, அவர்கள் தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்வதற்குச் சமம்."

"முன்னர், நிபந்தனையற்ற சரணடைதலைக் கோரியவர்கள் அவர்கள் அல்லவா? அப்படியிருக்க, இப்போது பேச்சுவார்த்தைக்காகத் தங்கள் உயர் அதிகாரிகளை அவர்கள் ஏன் களமிறக்க வேண்டும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இப்பகுதியில் உள்ள நாடுகள் அமெரிக்காவுக்கு உதவியதற்கு "ஆதாரங்கள்" இருப்பதாகவும், இது "எங்கள் குற்றச்சாட்டு மட்டுமல்ல, அவர்களே ஒப்புக்கொண்ட ஒன்று" என்றும் அராக்சி குறிப்பிட்டார். ஆனால் இது குறித்து அவர் மேலும் விவரிக்கவில்லை.

அப்பகுதி நாடுகள் "ஈரானின் எச்சரிக்கைகளைச் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை" என்றும், இப்போது "இயல்புக்கு மாறான சூழ்நிலையில்" சிக்கியுள்ளன என்றும் அவர் கூறினார்.

மேலும், "அமெரிக்காவிடமிருந்தும், ஈரானுக்கு எதிரான அதன் ஆக்கிரமிப்பிலிருந்தும் விலகி இருக்குமாறு" அவர் அந்நாடுகளை வலியுறுத்தினார்.

"அந்த நாடுகள் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை," என்றும், குறைந்தது வாய்மொழியாகவாவது கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பிப்ரவரி 28 முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதில், அப்போதைய ஈரானிய உச்சகட்ட தலைவர் அயதுல்லா அலி காமெனி உட்பட 1,340-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல், ஜோர்டான், ஈராக் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்ட வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ஈரான், டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

இந்த மோதல், உயிரிழப்புகளையும் உள்கட்டமைப்புச் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளதுடன், உலகளாவிய சந்தைகள் மற்றும் விமானப் போக்குவரத்தையும் பாதித்துள்ளது.

- பெர்னாமா

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.