நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தீச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

26 மார்ச் 2026, 7:56 AM
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தீச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

சிரம்பான், மார்ச் 26 - நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் நேற்று வரை பதிவாகியுள்ள தீச்சம்பவங்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய கடும் வறட்சி, வெப்பமான வானிலை மற்றும் சில தரப்பினரின் பொறுப்பற்ற திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகளே இந்த நிலைமைக்கு முக்கியக் காரணம் என நம்பப்படுகிறது.

இது குறித்துப் பேசிய மாநில தீயணைப்புத் துறை இயக்குனர் நோர் அரிஃபின் காமாரி, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் வெறும் 79 தீச்சம்பவங்களே பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு அது 205 வழக்குகளாக உயர்ந்துள்ளது என்றார்.

இது சுமார் 159.5 விழுக்காடு அதிகரிப்பாகும். இதில் புதர்க்காடுகள், பழத்தோட்டங்கள், காடுகள் மற்றும் குப்பை கிடங்குகளில் ஏற்பட்ட தீ விபத்துகளும் அடங்கும். தற்போதைய அதீத வெப்பம் மற்றும் பலத்த காற்று, நெருப்பு மிக எளிதாகவும் கட்டுப்பாடின்றியும் பரவ வழிவகுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மண் வறண்டு காணப்படுவதால், ஒரு சிறிய தீப்பொறி கூட மிகப்பெரிய தீ விபத்தாக மாறக்கூடும் என்று அவர் விளக்கினார்.

பெருநாள் காலம் நெருங்கி வருவதால், வீட்டைச் சுத்தம் செய்ய குப்பைகளை எரிப்பது, பட்டாசு வெடிக்கும்போது சிதறும் தீப்பொறிகள் மற்றும் அணையாத சிகரெட் துண்டுகளை வீசுவது போன்ற செயல்களும் இந்தத் திறந்தவெளி எரிப்புச் சம்பவங்களுக்குக் கூடுதல் காரணியாக அமைந்துள்ளன.

தற்போது மாநிலத்தின் அவசரக்கால கட்டுப்பாட்டு மையத்திற்குத் தினமும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும், குறிப்பாகச் சிரம்பான், தெலுக் கெமாங் மற்றும் தம்பின் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தீச்சம்பவங்கள் பொதுமக்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாகக் கவலை தெரிவித்த நோர் அரிஃபின், அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக வறட்சியான இக்காலக்கட்டத்தில் எந்தவொரு திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என்றும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை சரியான இடத்தில் வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏதேனும் தீ விபத்துகளைக் கண்டால் உடனடியாக 999 அவசர எண்ணிற்கு அல்லது அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.