ஷா ஆலம், மார்ச் 25 - ஷா ஆலம், செக்க்ஷன் 19-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஏழாவது மாடியிலிருந்து விழுந்ததாக நம்பப்படும் 14 வயது இளைஞர் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
நேற்று மாலை 4.20 மணியளவில் அந்த கட்டிடத்தின் தரைப்பகுதியில் அச்சிறுவன் மயக்க நிலையில் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக அவனை மீட்டு ஷா ஆலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி மாலை 5.40 மணியளவில் அந்த இளைஞன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்த புகார் நேற்று மாலை 6.44 மணியளவில் கிடைக்கப்பெற்றதாக ஷா ஆலம் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி ரம்ஸி எம்போல் தெரிவித்துள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்திருக்கலாம் எனக் கருதப்பட்ட நிலையில், மேல் விசாரணையில் அவர் ஏழாவது மாடியிலிருந்து விழுந்திருக்கக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில் எவ்வித சதிச்செயலுக்கான அறிகுறிகளும் தென்படவில்லை என்பதால், இந்த வழக்கு 'திடீர் மரணம்' (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய இன்று உடற்கூறு ஆய்வு நடத்தப்படவுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள், விசாரணை அதிகாரி அல்லது ஸ்ரீ மூடா காவல் நிலையத் தலைவர் இன்ஸ்பெக்டர் சுல்ஹுஸ்னி ஹசானியை 011-39360779 என்ற எண்ணிலோ அல்லது ஷா ஆலம் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 03-55202222 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.








