பிலிப்பைன்ஸில் 400-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் மூடல்

24 மார்ச் 2026, 1:18 AM
பிலிப்பைன்ஸில் 400-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் மூடல்

மணிலா, மார்ச் 24 – எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் தங்களது சேவையை நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு தேசிய காவல்துறை (PNP) தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை நிலவரப்படி 273 நிலையங்கள் மட்டுமே மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 403-ஆக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் ரான்டால்ப் துவானோ, நாடு முழுவதும் உள்ள 14,313 பெட்ரோல் நிலையங்களை அதிகாரிகள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் கூறினார்.

தற்போதைய கையிருப்பைக் கணக்கிடும்போது, ஏப்ரல் மாதம் பாதியில் முடியும் வரை எரிபொருள் விநியோகம் சீராக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இருப்பினும், பெட்ரோல் நிலையங்கள் மூடப்படுவதற்குப் பின்னால் விலை மோசடி அல்லது திட்டமிட்ட பதுக்கல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சட்டவிரோத விற்பனை, எரிபொருளைப் பதுக்குதல் மற்றும் கூடுதல் லாபம் ஈட்டுதல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்ட நிலையங்கள் மீது ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்தகையச் சூழலில், சில நிலையங்கள் வேண்டுமென்றே விலையை மாற்றியமைக்கும் நோக்கில் செயல்படுகிறதா என்பதைக் கண்டறிய அந்நாட்டு எரிசக்தித் துறையுடன் இணைந்து காவல்துறை தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளது.

விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும், சந்தையில் போலித் தட்டுப்பாட்டை உருவாக்குபவர்களை அடையாளம் காணவும் கண்காணிப்புப் பணிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.