மணிலா, நவ.15 – உலகளாவிய நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்ளும் வகையில், உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் விநியோகத்தில் வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உற்பத்தித் திறனை வலுப்படுத்த ஆசியான் உறுப்பு நாடுகள் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்.
இதனை மணிலாவில் இன்று நடைபெற்ற 49-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் அமர்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்

அத்தியாவசியப் பொருட்களுக்காகக் குறிப்பிட்ட சில வெளிநாட்டு விநியோகஸ்தர்களை மட்டுமே சார்ந்திருப்பது பல்வேறு அபாயங்களை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், உரங்கள், விதைகள் மற்றும் கால்நடைத் தீவனங்கள் உள்ளிட்ட விவசாய பொருட்களின் வர்த்தகத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
நெருக்கடி காலங்களில் உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் விநியோகம் தடையின்றி நடைபெறுவதற்கான சிறப்பு வழித்தடங்களையும், உணவுக் கையிருப்புகளையும் மேம்படுத்த வேண்டும் என்றார் அவர்.
மருந்துப் பொருட்களைப் பொறுத்தவரையில், உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒழுங்குமுறை அங்கீகாரங்களை ஏற்றுக்கொள்வதுடன், கொள்முதல் சக்தி மற்றும் மருந்துக் கையிருப்புகளை ஒன்றிணைத்து அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகளுக்கான உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், 2060-ஆம் ஆண்டுக்குள் எரிசக்தித் தேவை நான்கு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆசியான் மின்சாரக் கட்டமைப்புத் திட்டத்தை (APG) விரைவுபடுத்துவது அவசியம் என அன்வார் குறிப்பிட்டார்.
இதன் மூலம் எல்லை தாண்டிய புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பகிர்வை மேம்படுத்தி, மலிவான மற்றும் பாதுகாப்பான எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்த முடியும் என்றார் பிரதமர்.

இதற்கிடையில், ஆசியான் டிஜிட்டல் பொருளாதாரக் கட்டமைப்பு ஒப்பந்தம் (DEFA) கையெழுத்திடப்பட்டதை வரவேற்ற அவர், இதன் மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் டிஜிட்டல் பொருளாதாரத்தை இரண்டு டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த முடியும் எனத் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன், தரவுகளின் மீதான இறையாண்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையைப் பாதுகாக்கும் வகையில் ஆசியான் நாடுகள் தங்களது கூட்டு தொழில்நுட்பத் திறன்களையும் நிர்வாகக் கட்டமைப்புகளையும் வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
பிலிப்பைன்ஸ் தலைமையில் நவம்பர் 15 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறும் 49-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு, 'நமது எதிர்காலத்தை ஒன்றிணைந்து வழிநடத்துவோம்' என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது.







