கோலாலம்பூர், மார்ச் 22: மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலால் உலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்த பின்னர், அரசின் மானிய செலவு ஒரு வாரத்திற்குள் சுமார் RM700 மில்லியனில் இருந்து RM3.2 பில்லியனாக அதிகரித்துள்ளது என்று பிரதமர் டத்துக் ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று தனது Facebook பதிவில், உலகம் அதிகமான அசாதாரண நிலையை எதிர்கொண்டு வரும் நிலையில், மக்களின் நலனையும் வாழ் வாதாரத்தையும் பாதுகாப்பது மடாணி அரசின் முக்கிய முன்னுரிமையாக உள்ளது என்று அவர் கூறினார்.
“இந்த மானியங்கள் BUDI Madani RON95 (BUDI95) மற்றும் BUDI Diesel திட்டங்கள் மூலம் வழங்கப் படுவதால், பொதுமக்களும் பெரும்பாலான வணிகர்களும் முழு சந்தை விலையை செலுத்த வேண்டிய அவசியமில்லை,” என்றார்.
மேற்கு ஆசிய மோதலுக்குப் பிறகு உலக எண்ணெய் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, மலேசியா போன்ற எண்ணெய் உற்பத்தி நாடும் ஏன் பாதிக்கப்படுகிறது என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர் என்று அன்வார் குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், உலகளாவிய முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் கடல்சந்தி (Strait of Hormuz) இந்த மோதலால் பாதிக்கப்பட்டதால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் குறைந்து, விலை அதிகரித்துள்ளது.“மலேசியாவின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 50 சதவீதம் இந்த ஜலசந்தி வழியாக வருகிறது.
அதனால் நாமும் பாதிக்கப்படுகிறோம்,” என்றார். “மலேசியா எண்ணெய் உற்பத்தி நாடாக இருந்தாலும், நாங்கள் ஏற்றுமதி செய்வதை விட அதிக அளவில் எண்ணெயை இறக்குமதி செய்கிறோம்,” என்றும் அவர் விளக்கினார்.
பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் பல இலக்குகளை, அதில் தெஹ்ரான் நகரையும், தாக்கியதில் சேதங்களும் பொதுமக்கள் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதற்குப் பதிலளிக்க ஈரான், இஸ்ரேல் பகுதிகளிலும் மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க சொத்துகளிலும் தாக்குதல் நடத்தியதுடன், ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியது.








