கோலாலம்பூர், மார்ச் 18 – மலேசியாவின் பல மாநிலங்களில் இன்று மாலை 5 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தீபகற்ப மலேசியாவில் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம் முழுமையாகவும், சிலாங்கூர் மாநிலத்தின் உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களும் இந்த மோசமான வானிலை பாதிப்புக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில், கெடாவின் கூலிம் மற்றும் பண்டார் பாரு ஆகிய இடங்களிலும், பினாங்கின் தெற்கு செபராங் பிறை பகுதியிலும் பலத்த மழை பெய்யக்கூடும்.
பேராக் மாநிலத்தில் கெரியான், லாரூட், மாதாங், செலாமா, கோலாகங்சார், கிந்தா, கம்பார், பாடாங் பெடாங் மற்றும் முவாலிம் உள்ளிட்ட கணிசமான இடங்கள் இந்த எச்சரிக்கை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இது தவிர, பகாங்கின் கேமரன் மலை மற்றும் ஜோகூர் மாநிலத்தின் பத்து பஹாட், குளுவாங், பொந்தியான், கூலாய் மற்றும் ஜோகூர் பாரு ஆகிய மாவட்டங்களிலும் இந்த வானிலை நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மலேசியாவைப் பொறுத்தவரை, சரவாக்கின் ஸ்ரீ அமான், காபிட் மற்றும் மிரி ஆகிய இடங்களிலும், சபாவின் தம்புனான், ரானாவ் மற்றும் தாவாவ் பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான தீவிரத்துடன் கனமழை பெய்யும் அறிகுறிகள் தென்படும்போதும், அந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் போதும் இத்தகைய இடி மின்னல் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
இந்தத் தற்காலிக எச்சரிக்கைகள் வெளியிடப்பட்ட நேரத்தில் இருந்து அதிகபட்சம் ஆறு மணி நேரம் வரை செல்லுபடியாகும்.
இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் திடீர் வெள்ளம் அல்லது மரங்கள் முறிந்து விழுதல் போன்ற அசம்பாவிதங்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.







