தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்களுக்கு நிதியுதவி

18 மார்ச் 2026, 7:23 AM
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்களுக்கு நிதியுதவி

ஷா ஆலம், மார்ச் 18 – பெஸ்தாரி ஜெயா மற்றும் சபாக் பெர்ணம் ஆகிய பகுதிகளில் அண்மையில் நிகழ்ந்த தீ விபத்துகளினால் உடைமைகளை இழந்து வாடும் ஆறு குடும்பங்களுக்கு MBI அறவாரியம் மொத்தம் 18,000 ரிங்கிட் நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.

இந்த துயரமான சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3,000 ரிங்கிட் ரொக்க உதவி வழங்கப்படும் என்று அந்த அறவாரியத்தின் தலைவர் அகமட் அஸ்ரி சைனல் நோர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

பெஸ்தாரி ஜெயாவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளையில், சபாக் பெர்ணமில் தீ விபத்துக்குள்ளான மற்றொரு குடும்பம் தற்போது தங்களது உறவினர்களின் இல்லத்தில் தங்கியிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயர் துடைக்க இந்த 3,000 ரிங்கிட் நிதியுதவியுடன், போர்வைகள், தலையணைகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளும் இன்று முதல் விநியோகிக்கப்படும் என்று அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தீ விபத்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்காக, MBI அறவாரியம் ஆண்டுதோறும் ஒதுக்கும் 1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டும் தொடரும் என்பதை அகமட் அஸ்ரி உறுதிப்படுத்தினார்.

இந்த உதவித் திட்டங்கள் வெறும் ரொக்கப் பணத்தோடு நின்றுவிடாமல், உணவு கூடைகள் மற்றும் அன்றாடத் தேவைக்கான இதர பொருட்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று அவர் தெளிவுபடுத்தினார். மாநில அரசின் இந்த உடனடி நடவடிக்கை பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.