விருதை வென்ற மினாஹ் சதே: ஏற்றுமதிக்காக ‘சதே கிட்’ அறிமுகம்

9 ஆகஸ்ட் 2026, 3:48 AM
விருதை வென்ற மினாஹ் சதே: ஏற்றுமதிக்காக ‘சதே கிட்’ அறிமுகம்

சுபாங், ஆகஸ்ட் 8 : சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் (PLATS) திட்டத்தில் பங்கேற்ற தொழில்முனைவர் ஒருவர், சதே (Satay) தயாரிப்புகள் அனைத்துலகச் சந்தையில் எளிதாக நுழைவதற்காக 'சுயமாக தயாரிக்கும் சதே கிட்' (DIY Satay Kit) உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார்.

சில நாடுகளுக்கு இறைச்சி மற்றும் கோழி சார்ந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை எதிர்கொண்ட பிறகே, இந்த கிட்டை உருவாக்கும் யோசனை தோன்றியதாக

மினாஹ் சதே (Minah Satay) நிறுவனத்தின் உரிமையாளர் நூர்மினாஹ் ஷாஃப்ரியால் தெரிவித்தார்.

இந்த கிட்டில் சதே மசாலா, உடனே சாப்பிடக்கூடிய தொழில்நுட்பத்தில் (Retort Technology) தயாரிக்கப்பட்ட வேர்க்கடலை சட்னி மற்றும் சதே தயாரிப்பதற்கான வழிகாட்டி ஆகியவை அடங்கியுள்ளன.

இது வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான உணவை எளிதாகத் தயாரிக்க உதவும்.

"மலேசியாவில் உள்ள அனைவருக்கும் சதே பற்றித் தெரியும், ஆனால் வெளிநாடுகளில் உள்ள பலருக்கு பிபிக்யூ (BBQ) உணவு தான் அதிகம் பரிச்சயம். அதனால்தான் அனைத்துலக சந்தையில் எளிதாகச் சென்றடைவதற்காக இதற்கு 'சதே பிபிக்யூ கிட்' (Satay BBQ Kit) என்று பெயரிட்டோம்.

இந்த கிட்டில் மசாலா, ரெடோர்ட் முறையில் (Retort Technology) தயாரிக்கப்பட்ட வேர்க்கடலை சட்னி மற்றும் தயாரிக்கும் முறையை நாங்கள் வழங்குகிறோம். வாடிக்கையாளர்கள் கோழி இறைச்சியை வாங்கி, மசாலா தடவி, அவர்களே சமைத்துக் கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் பிளாட்ஃபார்ம் விருது விழாவிற்குப் (MAPS) பிறகு மீடியா சிலாங்கூர் செய்தியாளரிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட MAPS நிகழ்ச்சி, சிலாங்கூர் மாநில பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு (UPEN), சிலாங்கூர் மந்திரி பெசார் கழகம் (MBI) மற்றும் ஊராட்சி அமைப்புகளின் (PBT) கூட்டு முயற்சியால் சாத்தியமானது.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமீருடின் ஷாரியும் கலந்து கொண்டார்.

நூர்மினாஹ் ஷாஃப்ரியால் 'சிலாங்கூர் மாநில முதன்மை குறுந்தொழில் முனைவோர் விருது'க்கான முதன்மை வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அவர் கிண்ணம் மற்றும் ரொக்கப் பணம், சிலாங்கூர் மடாணி தொழில்முனைவோர் நிதி உள்ளிட்ட ஒட்டுமொத்தப் பரிசுகளை வென்றார்.

விற்பனைப் புள்ளி (POS) முறையைப் பயன்படுத்தி வணிகச் செயல்பாடுகளை மேம்படுத்த உதவியதுடன், சமூக ஊடகங்களில் இன்னும் திறம்பட விளம்பரங்களை உருவாக்குவதற்கான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் வழிகாட்டுதலையும் PLATS வழங்கியதாக 42 வயதான அவர் தெரிவித்தார்.

"பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலின் மூலம், நாங்கள் இன்னும் ஈர்க்கக்கூடிய விளம்பரங்களை உருவாக்கக் கற்றுக்கொண்டோம், மேலும் டிக்டாக்கில் (TikTok) விளம்பர உத்திகளையும் வகுத்தோம். இதன் மூலம் எங்களது விற்பனை கணிசமாக அதிகரித்தது. தலைமை அலுவலகத்தின் விற்பனை அதிகரித்தது மட்டுமின்றி, இந்த உத்திகளை எங்களது முகவர்கள் மற்றும் உரிமம் பெற்ற கியோஸ்க்குகளுடன் (Kiosks) பகிர்ந்து கொண்டோம்.

இதனால் அவர்களும் இந்த விற்பனை வளர்ச்சியின் மூலம் பயனடைந்தனர்," என்றார்.

ஐந்தாவது ஆண்டாகச் செயல்பட்டு வரும் மினாஹ் சதே நிறுவனம், டாமன்சாராவில் ஒரு தொழிற்சாலை, ஓர் உணவகம் மற்றும் பல இடங்களில் உரிமம் பெற்ற எட்டு கியோஸ்க்குகளைக் கொண்டுள்ளது என்று நூர்மினாஹ் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.