ஷா ஆலம், 3 மார்ச்: பூச்சோங் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையின் போது, குப்பைகளை வீசிய 7 நபர்களுக்கு சுபாங் ஜெயா மாநகராட்சி (MBSJ) அபராதம் விதித்துள்ளது. நகரத்தின் தூய்மையைத் தொடர்ந்து பேணுவதையும், நடைமுறையில் உள்ள விதிகளுக்குப் பொதுமக்கள் கீழ்ப்படிவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு, பூச்சோங் நகர் மையம் மற்றும் பண்டார் பூச்சோங் ஜெயா ஆகிய இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கண்காணிப்பின் போது, சம்பந்தப்பட்ட இடங்களில் சிகரெட் துண்டுகளை வீசியது உள்ளிட்ட பல தவறுகள் கண்டறியப்பட்டன. இதனைத் தொடர்ந்து, சுபாங் ஜெயா மாநகராட்சி அமலாக்க அதிகாரிகளால் அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டது. பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவது, சுபாங் ஜெயா மாநகராட்சியின் குப்பைகளைச் சேகரித்தல், அகற்றுதல் மற்றும் அழித்தல் தொடர்பான துணை விதிகளின் கீழ் ஒரு குற்றமாகும். மேலும், இத்தகையச் செயல்கள் 1974-ஆம் ஆண்டு சாலை, வடிகால் மற்றும் கட்டிடச் சட்டத்தின் (சட்டம் 133) கீழும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
நகரத்தின் தூய்மை என்பது அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்பதைச் சமூகத்திற்கு நினைவூட்டும் வகையில், இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவ்வப்போது தொடரும் என்று மாநகராட்சி தெரிவித்தது. பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுவதில் அதிகப் பொறுப்புடன் இருக்குமாறும், குப்பைகளையோ அல்லது சிகரெட் துண்டுகளையோ விருப்பம் போல் வீச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்








