காட்டுத்தீ பரவியதில் 700 பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின

16 மார்ச் 2026, 1:49 AM
காட்டுத்தீ பரவியதில் 700 பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின

துவாரன், மார்ச் 16: துவாரன், ஜாலான் டூங்குன் பகுதியில் உள்ள மராபஹாய் தம்பாலாங் 2 எனும் இடத்தில் அமைந்துள்ள வாகனக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சுமார் 700 பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

நேற்று நண்பகல் சுமார் 0.8 ஹெக்டேர் பரப்பளவிலான அந்தச் சேமிப்புக் கிடங்கில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கிடங்கிற்கு அருகில் அமைந்திருந்த காட்டில் ஏற்பட்ட தீ, பலத்த காற்றினால் மிக வேகமாகப் பரவி வாகனக் கிடங்கிற்குள் புகுந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் நம்பப்படுவதாகச் சபா மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்தது.

இச்சம்பவம் தொடர்பாக மதியம் 1.10 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற தீயணைப்புப் படையினர், அடுத்த எட்டு நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த மீட்புப் பணியில் துவாரன் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 25 வீரர்கள் ஈடுபட்டதோடு, லின்டாஸ் மற்றும் கோத்தா கினபாலு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களும், ஆறு காவல்துறை அதிகாரிகளும் அவர்களுக்கு உதவியாகப் களமிறக்கப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையினால், அருகில் இருந்த சுமார் 30 வாகனங்கள் எரியாமல் பாதுகாக்கப்பட்டன. மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தீயணைப்புப் படையினரின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, மாலை 3.31 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மீண்டும் தீப்பிடிக்க வாய்ப்பு இல்லை என்பதை உறுதி செய்த பின்னர், மாலை 4.55 மணியளவில் மீட்பு நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.