ஜகார்த்தா, மார்ச் 15 - வளர்ந்து வரும் எட்டு நாடுகள் குழுவின் (டி-8) உச்சநிலை மாநாடு மற்றும் அது தொடர்பான கூட்டங்கள் ஏப்ரல் 15-ஆம் தேதி ஜகார்த்தாவில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேற்கு ஆசியாவின் தற்போதைய நிகழ்வுகளே இதற்குக் காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய வெளியுறவு அமைச்சின் பல்தரப்பு ஒத்துழைப்புக்கான இயக்குநர், திரி தர்யாத் கூறுகையில், வெளியுறவு அமைச்சர் சுகியோனோ டி-8 உறுப்பு நாடுகளுக்கு மாநாடு ஒத்திவைக்கப்படுவது குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார் என்றார்.
இந்தோனேசியா, பங்களாதேஷ், எகிப்து, ஈரான், மலேசியா, நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கியே ஆகிய நாடுகளை உள்ளடக்கிய டி-8 என்பது ஒரு பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பாகும். டிசம்பர் 2024-இல் அஜர்பைஜான் இதன் புதிய உறுப்பினராக இணைந்தது.
2026 - 2027-ஆம் ஆண்டு காலக்கட்டத்திற்கு இந்தோனேசியா டி-8 அமைப்பின் தலைமைப் பொறுப்பை வகிக்கிறது. "உலகளாவிய மாற்றத்தை வழிநடத்துதல்: சமத்துவம், ஒற்றுமை மற்றும் பொதுவான செழிப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்" என்பதே இந்தோனேசியாவின் தலைமையின் கருப்பொருளாகும்.
மாநாட்டிற்கான புதிய தேதி பின்னர் விவாதிக்கப்படும் என திரி தர்யாட் கூறினார். "தற்போதைய சூழலில், மேற்கு ஆசியாவில் நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருப்பதால், மாநாட்டை நடத்துவது பொருத்தமற்றதாக இருக்கலாம்," என்றார் அவர்.
உச்சநிலை மாநாடு மற்றும் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டாலும், இந்தோனேசியாவின் டி-8 தலைமைத்துவம் தொடர்பான மற்ற நடவடிக்கைகள் திட்டமிட்டபடி தொடரும் என்று அவர் கூறினார்.
"இந்தோனேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் (Kadin) ஏற்பாடு செய்துள்ள சில நடவடிக்கைகள் திட்டமிட்டபடி தொடரும். சில தொழில்நுட்ப அமைச்சுகளால் மேற்கொள்ளப்படும் திட்டங்களும் தொடரும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எகிப்திடமிருந்து அதிகாரப்பூர்வப் பொறுப்பு ஒப்படைப்பு இன்னும் நடைபெறவில்லை என்றாலும், இந்த ஆண்டு நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, டி-8 உறுப்பு நாடுகள் இந்தோனேசியாவைத் தலைமைப் பொறுப்பில் உள்ளதாகவே கருதுகின்றன என்றும் திரி விளக்கினார்.
"எனவே, இந்த ஒத்திவைப்பு எங்களின் ஒட்டுமொத்த நிகழ்ச்சி நிரலை மாற்றாது. ஆனால், உச்சநிலை மாநாட்டுடன் இணைந்து நடைபெறவிருந்த டி-8 வணிக மன்றம் மற்றும் ஹலால் கண்காட்சி ஆகியவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன," என்றார் அவர்.
-- பெர்னாமா
ஜகார்த்தாவில் நடைபெறவிருந்த டி-8 உச்சநிலை மாநாட்டை இந்தோனேசியா ஒத்திவைத்துள்ளது
15 மார்ச் 2026, 9:04 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
antarabangsa
இந்தோனேசியாவை உலுக்கிய 6.3 ரிக்டர் நிலநடுக்கம்
Media Selangor Team
12 செப்டெம்பர் 2026

national
ஜகார்த்தா செல்லும் மலேசியர்கள் விமான நிலவரத்தைச் சரிபார்க்க அறிவுறுத்து
Media Selangor Team
7 செப்டெம்பர் 2026

national
ஜகார்த்தா விமான நிலையத்தில் 3 மலேசியப் பெண்கள் போதைப் பொருளுடன் கைது
Shalini Rajamogun
6 ஆகஸ்ட் 2026

national
காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த மலேசியாவின் உதவிக்கு இந்தோனேசியா ஒப்புதல்
Media Selangor Team
16 அக்டோபர் 2026

வகைantarabangsa
உங்கள் கருத்து என்ன?



