ad

வட ஜகார்த்தாவில் உள்ள பள்ளியில் வெடிப்பு சம்பவம்- 96 பேர் காயம்

11 நவம்பர் 2025, 7:37 AM
வட ஜகார்த்தாவில் உள்ள பள்ளியில் வெடிப்பு சம்பவம்- 96 பேர் காயம்

ஜகார்த்தா, நவ 11- இந்தோனேசிய நாட்டின் வட ஜகார்த்தாவில் உள்ள SMAN 72 அரசு உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இரண்டு வெடிப்புச் சம்பவங்களில், 96 பேர் காயமடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தீக்காயங்கள் மற்றும் சிதறிய பொருட்களால் ஏற்பட்ட காயங்களைப் பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் 54 ஆக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, மேலும் பலர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து உயர்ந்துள்ளது.

பள்ளி வளாகத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடந்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. காயமடைந்தவர்களில் 29 பேர் இன்னும் மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும், மற்றவர்கள் வெளிநோயாளிகளாக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் தேசிய போலீஸ் தலைவர் லிஸ்டியோ சிக்னிட் பிரபோவோ உறுதிப்படுத்தினார்.

பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் மனநல மீட்புக்கு ஆதரவளிக்க காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இணைந்து ஒரு மன அழுத்த சிகிச்சை மையத்தை (trauma centre) அமைக்கவுள்ளன. இந்தச் சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான, அதே பள்ளியைச் சேர்ந்த 17 வயது மாணவர், தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) கண்காணிப்பில் உள்ளார்.

அவரது நிலை சீராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சந்தேகத்திற்குரிய தூள் தடயவியல் ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதை அறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சித்தாந்த ரீதியான தாக்கங்கள், சமூக ஊடகங்களின் தாக்கம், அல்லது சந்தேக நபர் முன்னர் பள்ளி மாணவர்களின் மிரட்டலுக்கு (bullying) ஆளானாரா என்பன உள்ளிட்ட அனைத்து சாத்தியக்கூறுகளையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவான டேன்சஸ் 88 (Densus 88), பயங்கரவாத வலைப்பின்னலுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரித்து வருகிறது, இருப்பினும் இதுவரை அதை உறுதிப்படுத்த ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. விசாரணை முடியும் வரை ஊகங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.