உணவுக் கையிருப்பு காலத்தை மூன்று மாதங்களாக உயர்த்த பிகேபிஎஸ் முடிவு செய்துள்ளது

15 மார்ச் 2026, 7:22 AM
உணவுக் கையிருப்பு காலத்தை மூன்று மாதங்களாக உயர்த்த பிகேபிஎஸ் முடிவு செய்துள்ளது

ஷா ஆலம், மார்ச் 15: உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்படக்கூடிய தடைகளை எதிர்கொள்ளும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிலாங்கூர் மாநிலத்தின் உணவு கையிருப்பு காலத்தை ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதங்களாக உயர்த்த சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் (பிகேபிஎஸ்) முடிவு செய்துள்ளது.

இத்திட்டம் 'சிலாங்கூர் உணவு சேமிப்பு கிடங்கு' (Selangor Food Warehouse) திட்டத்தின் கீழ் இவ்வாண்டு வலுப்படுத்தப்பட்டு, மாநில மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுத்தப்படும்.

ஹார்முஸ் நீர்ச்சந்தி (Strait of Hormuz) போன்ற பகுதிகளில் நிலவும் புவிசார் அரசியல் மோதல்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தைப் பாதிப்பதோடு, உணவு விநியோகச் சங்கிலியையும் சீர்குலைக்கக்கூடும் என்று பிகேபிஎஸ் (PKPS) குழும தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ முகமட் கைரில் முகமட் ராசி எச்சரித்தார்.

இத்தகைய சூழல்கள் பொருளாதாரத்திலும் உணவு விநியோகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் நாடு சந்தித்த சவால்களைப் போன்ற நிலையைத் தவிர்க்க உணவுப் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றார்.

கிள்ளான், விண்டாம் அக்மார் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்துகொண்டபோது அவர் இந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் சுமார் 120-க்கும் மேற்பட்ட ஊடகத் துறையினர் கலந்துகொண்டனர்.

மேலும், மாநிலத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்க 'பிகேபிஎஸ் விவசாய வணிக உருமாற்றத் திட்டம் 2026–2030' (SEED2030) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ், 2030-ஆம் ஆண்டிற்குள் செம்பனை எண்ணெய் உற்பத்தியை 735,000 மெட்ரிக் டன்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தற்போதைய உற்பத்தியை விட சுமார் 65 விழுக்காடு அதிகமாகும். அதேபோல், கோழி இறைச்சித் தேவையைப் பூர்த்தி செய்யக் கோழி உற்பத்தியை 20.1 மில்லியனாக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிலாங்கூர் மாநிலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதோடு, எத்தகைய உலகளாவிய நெருக்கடிகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் என அவர் உறுதியளித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.