பலகோங் தொழிற்சாலைகளில் தீ விபத்து: நான்கு நிறுவனங்கள் தீக்கிரை

15 மார்ச் 2026, 1:55 AM
பலகோங் தொழிற்சாலைகளில் தீ விபத்து: நான்கு நிறுவனங்கள் தீக்கிரை

ஷா ஆலம், மார்ச் 15: சிலாங்கூர், பலக்கோங் பகுதியில் உள்ள தாமான் செராஸ் ஜெயாவில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் நான்கு தொழிற்சாலைகள் முற்றாகச் சேதமடைந்தன.

இச்சம்பவம் குறித்து நேற்றிரவு 9.24 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, பண்டார் துன் ஹுசேன் ஓன் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, இரவு 10.18 மணியளவில் தீ மேலும் பரவாமல் தீயணைப்பு வீரர்களால் கட்டுப்படுத்தப்பட்டது.

இருப்பினும், இந்த விபத்தில் நான்கு தொழிற்சாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு தொழிற்சாலை 100 விழுக்காடு முற்றாக எரிந்து சாம்பலாகிய வேளையில், மற்ற மூன்று தொழிற்சாலைகள் முறையே 90, 80 மற்றும் 50 விழுக்காடு சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட மூன்று வளாகங்களில் இன்று காலை வரை தீயை முழுமையாக அணைக்கும் பணிகள் தொடர்ந்தன. குறிப்பாக, தீயின் தீவிரம் மற்றும் பாதிப்புகளைத் துல்லியமாக மதிப்பிடுவதற்காக ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானப் பிரிவும் களமிறக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த மீட்புப் பணியில் ஸ்ரீ கெம்பாங்கான், காஜாங், ஜாலான் ஹாங் துவா, செராஸ், பாங்கி மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகிய தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். அவர்களுக்கு உதவியாக செர்டாங் தன்னார்வ தீயணைப்புப் படை மற்றும் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்ச் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.