மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் மலேசியாவின் உள்நாட்டு பொருளாதாரத்தில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை

13 மார்ச் 2026, 3:31 AM
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தால் மலேசியாவின் உள்நாட்டு பொருளாதாரத்தில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை

கோலாலம்பூர், மார்ச் 13 - மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தினால் மலேசியாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் அல்லது அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தில் இதுவரை எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சமடைந்து பொருட்களைக் குவித்து வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

உலகளாவிய எண்ணெய் விலை மற்றும் விநியோகச் சங்கிலியில் இந்த மோதல்கள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், மலேசிய நுகர்வோரைப் பொறுத்தவரை அதன் தாக்கம் உடனடியானதாக இருக்காது என்று மலேசிய நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பின் (FOMCA) தலைமை நிர்வாக அதிகாரி சரவணன் தம்பிராஜா விளக்கினார்.

"தற்போதைய நிலையில், இந்தப் போர்ச் சூழலால் பொருட்களின் விலையில் பெரிய அளவிலான உயர்வு எதுவும் ஏற்படவில்லை. உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) சந்தை நிலவரத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதையும், அவை நியாயமான விலையில் விற்கப்படுவதையும் உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை அமைச்சு எடுத்து வருகிறது," என்று அவர் கூறினார்.

இருப்பினும், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், போர் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்தால் போக்குவரத்து மற்றும் சரக்குக் கையாளும் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது எதிர்காலத்தில் பொருட்களின் விலையில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

முன்னதாக, மலேசியாவில் எண்ணெய் விநியோகம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், மானிய விலையிலான RON95 பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு RM1.99 என்ற நிலையிலேயே தொடரும் என்றும் கடந்த புதன்கிழமை நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

உறுதியளித்தார். மேலும், பெட்ரோல் கடத்தலைத் தடுக்கத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் மற்றும் KPDN அமைச்சுக்கும் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க நுகர்வோர் தங்களின் செலவினங்களைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்திய சரவணன் தம்பிராஜா, "தற்போது பொருட்கள் தட்டுப்பாடின்றி இருப்பதால் பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும். அதே வேளையில், வியாபாரிகள் யாரேனும் விலையை முறையற்ற முறையில் உயர்த்தினால், நுகர்வோர் உடனடியாக அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.