விளையாட்டுப் பூங்காக்களுக்குப் பொழுதுபோக்கு உரிமக் கட்டுப்பாடு: சிலாங்கூர் அரசு மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

22 ஜூன் 2026, 4:03 AM
விளையாட்டுப் பூங்காக்களுக்குப் பொழுதுபோக்கு உரிமக் கட்டுப்பாடு: சிலாங்கூர் அரசு மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

ஷா ஆலம், ஜூன் 22 - சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்காக்களைப் பொழுதுபோக்கு உரிமப் (hiburan) பிரிவின் கீழ் வகைப்படுத்தும் முன்மொழிவை மாநில அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என மலேசியத் தீம் பார்க் மற்றும் குடும்பப் பொழுது போக்கு இடங்களின் சங்கம் அல்லது 'மாட்ஃபா' (MATFA) வலியுறுத்தியுள்ளது.

இந்த புதிய நடவடிக்கை அமலுக்கு வந்தால், ஆண்டு உரிமக் கட்டணம் மிகக் கடுமையாக உயரும் என்பதால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மாட்ஃபா தலைவர் டான்ஸ்ரீ ரிச்சர்ட் கோ, இந்த புதிய வகைப்பாட்டின் காரணமாக ஆண்டு உரிமக் கட்டணம் தற்போதிருக்கும் 500 ரிங்கிட்டிலிருந்து 6,390 ரிங்கிட் வரை, அதாவது கிட்டத்தட்ட 13 மடங்கு வரை உயரும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்தகைய கட்டண உயர்வு, குறிப்பாக பி40 (B40) மற்றும் எம்40 (M40) நடுத்தரக் குடும்பங்களுக்கு மலிவு விலையில் பொழுதுபோக்கு இடங்களை வழங்கி வரும் சிறுவர் விளையாட்டுப் பூங்காக்களின் உரிமையாளர்களுக்குப் பெருமளவிலான நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த வசதிகளைத் தொடர்ந்து பொழுதுபோக்கு (Recreation) உரிமப் பிரிவின் கீழேயே வைத்திருக்க வேண்டும் என்றும், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்குச் சேவை செய்யும் பூங்காக்களுக்குக் கட்டண விலக்கு அளிக்க பரிசீலிக்க வேண்டும் என்றும் மாட்ஃபா முன்மொழிந்துள்ளது.

அதே வேளையில், தற்போதைய காலத்திற்கு ஒவ்வாத 1953ஆம் ஆண்டு பொழுதுபோக்கு வரிச் சட்டத்தை (Akta Duti Hiburan 1953) முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என கூட்டரசு அரசாங்கத்திற்கு மாட்ஃபா மீண்டும் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ் தீம் பார்க், நீர் விளையாட்டுப் பூங்காக்கள் போன்ற இடங்களின் நுழைவுச் சீட்டுகளுக்கு 25 விழுக்காடு வரை வரி விதிக்கப்படுவதாகவும், இந்த வரிச் சுமையை நடத்துனர்கள் ஏற்பதில்லை, மாறாகப் பொதுமக்கள் மீதே இது சுமத்தப்படுகிறது என்றும் ரிச்சர்ட் கோ தெரிவித்தார்.

இத்தகைய சவாலான காலகட்டத்தில் மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றுவது முறையல்ல என்றும், தாய்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகளில் இதுபோன்ற வரிகள் இல்லை. அதனால்தான் செலவுகளைக் குறைக்க மலேசியக் குடும்பங்கள் தற்போது ஹாட்யாய் (Hatyai) போன்ற இடங்களுக்குப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர் என்றும் அவர் விவரித்தார்.

இத்துறையை மேம்படுத்தவும், சிலாங்கூர் மாநிலத்தைக் குடும்பப் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாவின் முக்கிய மையமாக நிலைநிறுத்தவும், மாநில அரசு மற்றும் உள்ளாட்சி மன்றங்களுடன் இணைந்து நவீன மற்றும் நிலையான ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்க மாட்ஃபா தயாராக இருப்பதாகவும் டான்ஸ்ரீ ரிச்சர்ட் கோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.