கோலாலம்பூர், ஜூன் 22 - கோலாலம்பூரில் உள்ள பிரின்ஸ் கோர்ட் (Prince Court) மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த திமோர்-லெஸ்தே நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்சிஸ்கோ குட்டெரெஸ், தனது 71ஆவது வயதில் நேற்று காலமானார்.
மறைந்த முன்னாள் அதிபரின் குடும்பத்தினருக்கும் திமோர்-லெஸ்தே நாட்டு மக்களுக்கும் மலேசியாவின் சார்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
திமோர்-லெஸ்தே நாட்டின் விடுதலைக்காகப் போராடிய மாபெரும் தலைவர்களில் பிரான்சிஸ்கோ குட்டெரெஸும் ஒருவர் என்றும், அவர் தனது மக்களின் சுதந்திரத்திற்காகவும், ஒரு ஜனநாயக நாட்டை உருவாக்குவதற்காகவும் இறுதிவரை அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் என்றும் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.
திமோர்-லெஸ்தே விடுதலைக்கான எதிர்ப்பு இயக்கத்தில் பல ஆண்டுகள் தீவிரமாகப் பங்காற்றிய அவர், மக்கள் மத்தியில் 'லு-ஒலோ' (Lú-Olo) என்று அன்போடு அழைக்கப்பட்டார். பின்னர் அவர் தனது நாட்டிற்காக நாடாளுமன்றத் தலைவராகவும், நாட்டின் அதிபராகவும் மிகச் சிறந்த சேவையாற்றினார் என்பதைப் பிரதமர் தெரிவித்தார்.
இந்தத் துயரமான வேளையில், திமோர்-லெஸ்தே நாட்டு மக்களுடன் இணைந்து மலேசியாவும் துக்கம் அனுசரிக்கிறது என்றும், அவர் மலேசியாவில் எப்போதும் மிகுந்த மரியாதையுடனும் அன்புடனும் நினைவு கூரப்படுவார் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார்.
கடந்த 2017 முதல் 2022ஆம் ஆண்டு வரை திமோர்-லெஸ்தே நாட்டின் அதிபராகப் பதவி வகித்த பிரான்சிஸ்கோ குட்டெரெஸ், அந்த நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றின் மிக முக்கியத் தூணாகத் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.







