கிள்ளான் துறைமுகத்தின் 3-வது முனையத்தைக் கேரி தீவில் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

12 மார்ச் 2026, 8:11 AM
கிள்ளான் துறைமுகத்தின் 3-வது முனையத்தைக் கேரி தீவில் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

புத்ராஜெயா, மார்ச் 12 - சிலாங்கூர் மாநிலத்தின் கேரி தீவில் (Pulau Carey), கிள்ளான் துறைமுகத்தின் மூன்றாவது முனையத்தை (Terminal 3) அமைப்பதற்கான மேம்பாட்டுத் திட்டத்திற்கு மலேசிய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சு சமர்ப்பித்த இந்தத் திட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்தார். இத்திட்டத்தைச் சிலாங்கூர் மாநில அரசு முன்னின்று செயல்படுத்தும்.

இந்தத் திட்டம் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தாலும், அமைச்சரவை முடிவின் மூலம் அதன் அமலாக்க முறை குறித்த விரிவான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அமைச்சு இத்திட்டத்தைக் கண்காணிக்கும் ஒழுங்குமுறை அமைப்பாகச் செயல்பட்டு, பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகச் சிலாங்கூர் மாநில அரசு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஒரு சிறப்பு நோக்க நிறுவனத்தை (Special Purpose Vehicle - SPV) உருவாக்கும். இதன் மூலம், மூன்றாவது துறைமுகத்தைக் கட்டுவதற்கும் இயக்குவதற்கும் தேவையான தனியார் முதலீடுகள் ஈர்க்கப்படும்.

தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் முக்கியமான உட்கட்டமைப்புத் திட்டங்கள் தடைபடாது என்பதையே இந்த நடவடிக்கை காட்டுவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

முன்னதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், கேரி தீவுத் திட்டத்தைச் செயல்படுத்த அனைத்துத் துறைகளும் விரைந்து செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இத்திட்டமானது திறமையான, நேர்மையான மற்றும் முறையான தேசிய மேம்பாட்டு அமலாக்கத்திற்கு ஒரு புதிய முன்மாதிரியாக அமையும் என்று பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கிள்ளான் துறைமுகத்தின் இந்த மூன்றாவது முனையம், மலேசியாவின் துறைமுக மற்றும் தளவாடத் துறையை (Logistics) உலக அளவில் உயர்த்துவதோடு, நாட்டின் பொருளாதார நிலையை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய உத்திநோக்குத் திட்டமாகக் கருதப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.