கேரித் தீவு துறைமுகத்தின் அடிக்கல் நாட்டு விழாவை செப்டம்பரில் நடத்த இலக்கு

10 ஜூலை 2026, 9:39 AM
கேரித் தீவு துறைமுகத்தின் அடிக்கல் நாட்டு விழாவை செப்டம்பரில் நடத்த இலக்கு

பண்டோங், ஜூலை 10 : சிலாங்கூர் மாநில அரசு, கேரி தீவில் (Pulau Carey) திட்டமிட்டுள்ள மூன்றாவது துறைமுக முனையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை இந்த ஆண்டு செப்டம்பருக்குள் தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சின் துறைமுக உரிம ஒப்புதலுக்கு உட்பட்டு, மாநில அரசு இந்த முனையத்தை இயக்கவிருக்கும் நிறுவனங்களின் தேர்வை இறுதி செய்து வருகிறது.

நிலக் கையகப்படுத்துதல் மற்றும் நில மேம்பாட்டுப் பணிகள் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதால், கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கான இறுதி நிபந்தனையாக இந்தத் துறைமுக உரிமம் மட்டுமே உள்ளது என மாநில மெந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இந்தோனேசியாவின் பண்டோங்கில் 'SIBS@ASEAN' எனப்படும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டை தொடக்கி வைத்தப் பின்னர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

மலேசியாவில், கிள்ளான் துறைமுக வாரியம் போன்ற சட்டப்பூர்வ அதிகார அமைப்பால் கட்டுப்படுத்தப்படும் துறைமுகப் பகுதிக்குள் கடல்சார், கப்பல் போக்குவரத்து மற்றும் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியே துறைமுக உரிமமாகும்.

இதனிடையே, முனைய நடத்துனர் (Terminal Operator) தேர்வு குறித்து கருத்துரைத்த அமிருடின், துறைமுக உரிம ஒப்புதல் உட்பட அனைத்து நடைமுறைகளும் முழுமையாக முடிந்த பின்னரே அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எம்.எம்.சி கார்ப்பரேஷன் (MMC Corporation Bhd) உட்பட பல தரப்பினர் இந்த முனையத்தை இயக்குவதற்கு ஆர்வம் காட்டியுள்ளனர் என்று அவர் கூறினார்.

மாநில அரசின் பங்கு குறித்து பேசிய அமிருடின், மாநில அரசு, அத்திட்டத்தின் மேம்பாட்டினை ஒருங்கிணைக்கும் என்றும், மாநில அரசுக்குச் சொந்தமான ஒரு துணை நிறுவனம் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த முனைய செயல்பாட்டில் பங்குரிமையைக் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

வரி வருவாயைத் தவிர, துறைமுகத்தின் செயல்பாட்டு லாபத்திலிருந்தும் சிலாங்கூர் மாநிலத்திற்குத் தொடர்ச்சியான மற்றும் நிலையான வருமானம் கிடைப்பதை உறுதி செய்ய இந்த பங்குரிமை முக்கியமானது என்று அவர் விளக்கினார்.

இந்தத் துறைமுகம் முழுமையாகச் செயல்படக் குறைந்தது 10 ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.