கோலாலம்பூர், மார்ச் 12 – மலேசியத் திரையுலகில் நீண்ட காலமாகத் தடம் பதித்திருந்த பிரபலத் திரையரங்கு நிறுவனமான MBO சினிமாஸ், தனது வணிகச் செயல்பாடுகளை நிரந்தரமாக நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை அந்நிறுவனம் தனது சமூக ஊடகப் பக்கங்களில் மிகுந்த மனவருத்தத்துடன் வெளியிட்டுள்ளது.
"பல ஆண்டுகளுக்குப் பிறகு, MBO சினிமாஸ் இப்போது நிரந்தரமாக மூடுவிழாக் காண்கிறது," என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகத் தங்களுக்கு ஆதரவளித்தத் திரைப்பட ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ள நிர்வாகம், திரையரங்குகளில் மக்கள் எழுப்பிய ஆரவாரம், சிரிப்பொலி மற்றும் உணர்ச்சிகரமான தருணங்கள் அனைத்தும் தங்கள் நிறுவனத்திற்கு மிகுந்த மதிப்பிற்குரிய நினைவுகளாக இருக்கும் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளது.
தங்கள் இருக்கைகளை நிரப்பியதோடு மட்டுமல்லாமல், அன்பால் தங்களின் இதயங்களையும் நிரப்பியதற்காக வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் நன்றி பாராட்டியுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நாடு தழுவிய அளவில் தனது கிளைகளை மூடிய MBO சினிமாஸ், பின்னர் 2021-ஆம் ஆண்டில் கோல்டன் ஸ்கிரீன் சினிமாஸ் (GSC) அதன் சொத்துக்களைக் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து புதிய நிர்வாகத்தின் கீழ் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
தற்போது சிலாங்கூர், மலாக்கா, பேராக் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் எட்டு கிளைகளைக் கொண்டு இயங்கி வந்த நிலையில், இந்தத் திடீர் முடிவை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மலேசியத் திரையரங்குத் துறையில் ஒரு நீண்ட கால சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.








