கோலாலம்பூர், மார்ச் 10- மலேசியாவின் பல்லின சமூகத்திற்கிடையே மத ரீதியான பதற்றத்தைத் தூண்டும் வகையில் தமிம் தஹ்ரி அப்துல் ரசாக் என்பவர் மேற்கொண்ட அநாகரீகமான செயல்கள் கடும் கண்டனத்திற்குரியவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்து மதத்தின் புனிதச் சின்னமான திரிசூலத்தை அவர் மிதிப்பது போன்ற காணொளியைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டது, ஒட்டுமொத்த இந்துக்களின் மனதையும் ஆழமாகப் புண்படுத்தும் பொறுப்பற்றச் செயலாகும் என்று கெஅடிலானைச் சேர்ந்த சிவமலர் கணபதி கண்டனம் தெரிவித்தார்.
நாட்டில் நீண்டகாலமாகப் பேணப்பட்டு வரும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ள இத்தகைய தூண்டுதல் நடவடிக்கைகள், வெறும் தனிப்பட்ட செயல் என்பதைத் தாண்டி சமூக ஒற்றுமைக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன என்று அவர் கூறினார்.
மக்கள் நீதி கட்சியில் இணைவதாக அறிவித்துவிட்டு, பின்னர் அது ஒரு வேடிக்கையான விளையாட்டு என்று அவர் கூறியிருப்பது, ஓர் அரசியல் கட்சியின் அங்கத்துவ நடைமுறையைத் தரக்குறைவாகச் சித்தரிப்பதாகக் கருதப்படுகிறது.
மத உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் இத்தகைய நபருக்கு எதிராக அரச மலேசிய போலீஸ் படை (PDRM) மற்றும் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
கருத்து சுதந்திரம் என்பது மற்றவர்களின் மத நம்பிக்கைகளைப் புண்படுத்துவதற்கோ அல்லது இனங்களுக்கிடையே மோதலை உருவாக்குவதற்கோ வழங்கப்பட்ட உரிமம் அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று திட்டவட்டமாக கூறினார்.








