ஷா ஆலாம், மார்ச் 10 -கிள்ளான், கம்போங் பெராப்பாட், பத்து 9 1/2, ஜாலான் காப்பாரில் நிகழ்ந்த தீ விபத்தில் மூன்று தொழிற்சாலை வளாகங்கள் எரிந்து நாசமாகின.
சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குனர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறுகையில், இந்தத் தீ விபத்தில் 'சி' வகுப்பு வகையைச் சேர்ந்த மூன்று தொழிற்சாலை மனைகள் சம்பந்தப்பட்டதாகக் கூறினார்.
"முதல் தொழிற்சாலை வாகனப் பட்டறையாகும், அது 50 விழுக்காடு எரிந்தது. இரண்டாவது, மறுசுழற்சி தொழிற்சாலை, அது 100 விழுக்காடு முற்றிலும் எரிந்துவிட்டது."மூன்றாவது வளாகம் வண்ணப்பூச்சு (பெயிண்ட்) சேமிப்புக் கிடங்காகும், அதுவும் 100 விழுக்காடு நாசமானது," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பிற்பகல் 1.44 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, காப்பார், கிள்ளான் உத்தாரா, கிள்ளான் துறைமுகம், கிள்ளான் செலாத்தான், அண்டாலாஸ் மற்றும் புக்கிட் ஜெலுத்தோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 31 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
"இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. சம்பவ இடத்தில் திறந்த நீர் ஆதாரம் இல்லாததால், தீ இன்னும் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.








