பிளஸ் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு, நீலாய் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுத் திட்டம் காரணம்

8 மார்ச் 2026, 6:07 AM
பிளஸ் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு, நீலாய் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுத் திட்டம் காரணம்

ஷா ஆலாம், மார்ச் 7: கடந்த வியாழக்கிழமை பிளஸ் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு, நீலாய் ஓய்விடத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுத் திட்டமே காரணம் என அடையாளம் காணப் பட்டுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வெள்ளத்திற்கான காரணம் மற்றும் தீர்வு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, மேம்பாட்டாளர் மற்றும் நெடுஞ்சாலை தரப்பினர் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளுடன் ஒரு சிறப்பு கூட்டம் நடத்தப்படும்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் வீடமைப்பு, ஊராட்சி மற்றும் போக்குவரத்துத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ. அருள் குமார், சிரம்பான் மாநகராட்சி (MBS) மேயருடன் நேற்று அந்த இடத்திற்குச் சென்று உண்மையான நிலையை ஆய்வு செய்ததாகக் கூறினார்.

"நெடுஞ்சாலைக்குள் தண்ணீர் புகுந்த நீலாய் ஓய்விடத்திற்கு அருகிலுள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களின் நிலையை நாங்கள் ஆய்வு செய்தோம்."

"அப்பகுதியில் இரண்டு மேம்பாட்டுத் திட்டங்கள் இருப்பதைக் கண்டறிந்தோம். அவை சிரம்பான் மாநகராட்சியிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளன, அதன்படி அவை நீர்த் தேக்கக் குளங்களைக் கொண்டிருக்க வேண்டும்," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, மேம்பாட்டாளர் நீர்த் தேக்கக் குளங்களை அமைத்திருந்தாலும், மண்வேலைகள் நடந்து கொண்டிருந்ததால், அக்குளங்கள் முழுமையாகச் செயல்படவில்லை.

"மற்ற வேலைகளைத் தொடங்குவதற்கு முன், அப்பகுதியில் உள்ள ஐந்து நீர்த் தேக்கக் குளங்களும் சிறப்பாகச் செயல்படுவதை உறுதி செய்ய, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மேம்பாட்டாளரைக் கேட்டுக்கொண்டோம்," என்றார்.

நெடுஞ்சாலையைக் கடந்து செல்லும் மதகு (culvert) அதிகப்படியான நீர் ஓட்டத்தைத் தாங்க முடியாமல் இருப்பதும், சுற்றியுள்ள மேம்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப அதன் கொள்ளளவு மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அருள் குமார் கூறினார்.

"மேலும், அப்பகுதியில் உள்ள ஆற்றின் நிலையும் மேம்படுத்தப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும், இதனால் இரு திசைகளிலும் போக்குவரத்து ஓட்டத்தைப் பாதிக்கும் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும்," என்றார்.

இது தொடர்பாக, சிரம்பான் மாநகராட்சி, சிரம்பான் மாவட்ட மற்றும் நில அலுவலகம், மலேசிய நெடுஞ்சாலை வாரியம், பிளஸ், நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS) மற்றும் சம்பந்தப்பட்ட இரண்டு மேம்பாட்டாளர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளதாக அவர் கூறினார்.

"பிளஸ் நெடுஞ்சாலையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து பிரச்சனைகளையும் மேலும் விரிவாகக் கண்டறிந்து தீர்வு காண்பதே இதன் நோக்கமாகும்," என்றார்.

கடந்த வியாழக்கிழமை, திடீர் வெள்ளத்தால் இரு திசைகளிலும் பாதை தடைப்பட்டதால், பல நெடுஞ்சாலைப் பயனர்கள் சாலையிலேயே நோன்பு துறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.